எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றிலேயே மிகமோசமான வன்முறைகள் நிறைந்த தேர்தலாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை ஏகோபித்த குரலில் எச்சரித்திருக்கின்றனர்.
அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கட்சித் தாவல்களால் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வாக்காளர்களான மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்கும் அமைப்புக்கள் தமது செயற்பாடுகள் குறித்து குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார்கள்.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கெபே, பெப்ரல், லக்மவ, தியனியோ, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான அமைப்பு, மற்றும் சர்வதேச ஸ்ரமா அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது முதல் இன்று வரை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த நிலையை தடுக்க பொலிசார் நடவடிக்கைத் தவறிவிட்டார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் தேவைக்கு ஏற்ப இடமாற்றங்கள் இடம்பெறுவதாகவும் விசனம் வெளியிட்ட இவர்கள், அரச சொத்துக்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
-http://www.pathivu.com