இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவில் பேரணி

இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

mullaitheevu_fishermen
முல்லைத்தீவு மீனவர்களின் ஆர்ப்பாட்டம்

 

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்ற இந்திய மீனவப் படகுகளினால், ஜனவரி மாத பருவகால இறால் மீன்பிடித் தொழில் கடந்த 3 வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ள போதிலும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாத காரணத்தினால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள்.

அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்ற போதிலும், இந்திய மீனவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற போதிலும், அத்தகைய செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம் பெறாத காரணத்தினால், இலங்கைக் கடற்படையினரின் ஒத்துழைப்படன்தான் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் அத்துமீறி ஈடுபடுகின்றார்களோ என்று தமது மீனவர்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவம் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

இதற்கிடையில் வடகடலில் நெடுந்தீவுக்கருகில் அத்துமீறி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்களை அவர்களின்ன் 5 இழுவைப் படகுகளுடன் கடற்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்திருந்தனர். இவர்களை வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கையின் வடகடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: