தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: இந்திய அரசு விளக்கம்

refugee_india4இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக, தமிழக அரசின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அளித்துள்ள பதிலின் விவரம்:

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது.

மேலும், இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் மத்திய அரசு பேசி வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய விரும்புகிறது.

இலங்கைக்குத் திரும்ப முடிவெடுக்கும் அகதிகள், நம் நாட்டிடம் இருந்தும் இலங்கை அரசிடமிருந்தும் எத்தகைய வசதிகளை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிவதற்கு இந்த ஆய்வு அவசியம் என மத்திய அரசு கருதுகிறது.

இதற்கான ஏற்பாட்டை செய்யும் படியும், இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்தும் தமிழக அரசிடம் வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசின் முடிவுக்காக வெளியுறவுத் துறை காத்திருக்கிறது’ என்று வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராக வெங்கய்யா நாயுடு இருந்தார்.

அவரது தலைமையிலான குழு, “இலங்கை அகதிகளை மீண்டும் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது?’ என்று பலமுறை உள்துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பியது.

அதற்கு அப்போதைய மத்திய அரசு அளித்த பதில் போன்றே தற்போது வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. -http://www.tamilwin.com

TAGS: