தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடகிழக்கு மக்களும் இலங்கைப் பிரஜைகள் இல்லையா? அவர்கள் தனிநாட்டு மக்களா?அல்லது தீண்டாச் சரக்கா? என்பதை மகிந்த அரசின் அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆளும் கட்சி அமைச்சர்கள் கூட்டமைப்பைப் பற்றி எதிரணியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரசாரம் மேற்கொள்ளும் நிலை சம்பந்தமாக கேட்டபோதே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக கூறிய அவர்.
சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான பரப்பரைகளை கட்டவிழ்த்துள்ள அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இது பாரதூரமான விடயம் எனவும் மீண்டும் நாடு பிரியும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லையென அமைச்சர் நிமால் ஆர்டி சில்வா கூறுகிறார், சந்திரிகாவுடன் இரகசிய ஒப்பந்தம் பாரதூரமானது என அமைச்சர் ஜோன் செனவிரட்ண கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கோருவது தொடர்பில் தீர்மானிக்கவில்லையென ஜனாதிபதி மகிந்த கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளமை மீண்டும் பயங்கரவாதத்தையும் பிரிவினையையும் தோற்றுவிக்கும் என தற்போது அரசில் தாவி சுகாதார அமைச்சைப் பெற்ற திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்புடன் பேசினால் தோற்றுவிடுவோம் என்ற மனோநிலை தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை தென்பகுதி சிங்கள மக்களிடம் விதைத்து இனவாதத்தை தூண்டி வாக்குகளை பெறும் நோக்கில் அமைச்சர்களால் கூறப்படும் போது நாமும் வாய்பொத்தி கைகட்டிக் கொண்டிருக்க முடியாது.
வடகிழக்கு மக்களின் சுதந்தரமான கௌரவமான அரசியல் தீர்வுக்காக அரசியல் பணிகளை முன்னெடுக்கும் ஜனநாயகக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மக்களின் அங்கீகாரத்தை பல தேர்தல்களின் பெற்றுள்ளோம்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் எமது உரிமை கிடைக்கும் என நாம் கனவிலும் நினைக்கவில்லை.
அதற்காக இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என கூறவில்லை. தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையைவிட யாருக்கு வாக்களிக்ககூடாது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயம் காட்டி அவர்களுடன் தென்பகுதி அரசியல் வாதிகள் கதைத்தால் கதைக்கின்ற அந்த பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகளை துரோகிகளாக
சிங்கள மக்களிடம் காட்டி தமது ஆதரவை பெறுவதே அரசாங்கம் இந்த தேர்தலில் பிரதான பிரசாரமாக கையாள்கின்றது.
அப்படியான நடவடிக்கைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசு பயன்படுத்துகிறதை தமிழ் மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடங்கள் கழிந்த போதும் அரசியல் கைதிகளாக பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 500 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் அறிவித்து பல வாரங்கள் கடந்த போதும் அவர்களை விடுதலை செய்யவில்லை. சுதந்திரமாக நடமாட முடியாத புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் தான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டு இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்கவுள்ளனர்.
அரசுக்கு சார்பாக பிரசாரம் மேற்கொள்ளும் தமிழ் அமைப்பாளர்கள் அமைச்சர்கள் யாராவது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் வாதிகளையும் ஜனாதிபதியுடன் கதைத்து விடுதலை செய்ய முடியுமா?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பற்றுறுதி கொண்ட தமிழ் அரச உத்தியோகஸ்தர்களும், ஊழியர்களும் இக்கருத்தினை உள்ள வங்கி செயற்படுவதுடன் எமது தமிழ் புத்திஜீவிகளும், கல்விமான்களும் அரச அதிகாரிகளும் புரிந்து சாதாரண மக்களுக்கும் தெளிவுபடுத்துவது தான் இன்றைய அரசியல் தேவையெனவும் அரியம் எம்.பி மேலும் கூறினார். -http://www.tamilwin.com