நடந்தது தீமையென்றால் நடக்கப் போவது நல்லதாக வேண்டும்!

mahinthaa_maithirriகடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையில் நாம் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் வாக்கு பலத்தை நாம் கட்டாயம் பிரயோசனப்படுத்த வேண்டும் என்று.

எனினும் தற்பொழுது கடந்த 7 நாட்களாக இரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே பெரும்பான்மை மக்களின் வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டு வரும் வேகமும், உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களும், நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கட்சி தாவல்களும், தமிழ் மக்களிடையே எந்தவித சலனத்தையோ அல்லது ஆர்வத்தையோ தூண்டியதாக காண முடியாதுள்ளது.

இந்த இருவருமே தங்கள் சிங்கள சமூகத்தின் வாழ்வு, உயர்வு, பொருளாதார அபிவிருத்தி என்று பேசி சிங்கள மக்களை கவரும் விதமான மொழிகளை பயன்படுத்தி, உறுதிகளையும் அள்ளி வீசுவதை காணமுடிகின்றது.

அத்தோடு இந்த இருவரில் மகிந்த ராஜபக்ச சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசுவதையும் அதன் மூலம் சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுகின்ற வழிமுறைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏனைய அமைச்சர்கள் கூட்டங்களில் தமிழ் மக்களை பயங்கரவாதிகள் நாட்டை பிரிக்க முயற்சிப்பவர்கள் என்ற பொருள்படும் வகையில் பேசுவதையும் காணக்கூடியதாக தெரிகின்றது.

இந்த நிலையில் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் மௌனம் இந்த சிங்கள அடிப்படைவாதிகளைின் ஆத்திரத்தை மேலும் தூண்டிக்கொண்டு இருக்கின்றது.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது வழக்கம் ஆனால் இப்போதைக்கு தமிழ் தலைவர்களின் மௌனம் இந்த சிங்கள தலைவர்களுக்கு தலையிடியாக இருக்கின்றது.

என்ன, எப்படி என்று தலைவர்கள் முதல் அவர்களின் ஆதரவாளர்கள் வரை துடிக்காமல் துடிக்கின்றார்கள். ஆனால் அவை சிங்கள சாதாரண பொதுமகனுக்கு தெரியாது.

மலையக தமிழ் தலைமைகளோ உறுதியற்ற நிலையில் தங்களின் இருப்புகளை பாதுகாக்கும் பணிகளை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

இவர்களின் கட்சி தாவல்கள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என்பதை இவர்களுக்கு நன்கு புரியும். அரசுக்கு தொடர்ந்து ஆதரவு என்று கூறும் இ.தொ.காங்கிரஸ் அரசை விட்டு வெளியேற முடியாமல் இருக்க அரச தலைவர்கள் அவர்களை மிக கவனமாக கண்காணிப்பதாகவும் தெரிய வருகின்ற அதேவேளை மலையகமெங்கும் மகிந்தவிற்கு ஆதரவு என இ.தொ.காங்கிரஸினால் போடப்பட்டதாக கூறப்படும் கட்அவுட் விளம்பரங்களை அரசே அதன் செலவில் மலையக நகரமெங்கும் போட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றது.

இ.தொ.காங்கிரஸ் அரசில் இருந்து மீள முடியாத வகையில் அரசு கடிவாளத்தை இவர்களுக்கு போட்டுள்ளதோடு அவர்களின் சகல நடவடிக்கைகளையும் கவனமெடுத்து தனது பார்வைக்குள் வைத்துள்ளது.

எனினும் இ.தொ.காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலரிடம் இந்த தேர்தல் தொடர்பாக கருத்து கேட்டபோது அவர்களின் பதில்களோ யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து கொள்வோம் இதில் எந்த வித மாற்றமும் கிடையாது.இதைப்பற்றி எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்று மிக தெளிவாக கூறுகின்றார்கள்.

மலையக தோட்ட தொழிலாளர்களிடையே யாருக்கு ஆதரவு என்று கேட்டால் அவர்கள் தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு மாறுபட்ட கருத்தையே கூறுகின்றார்கள்.

மீரியபெத்த மண் சரிவிற்குப் பின் மலையக மக்களிடையே ஒரு மனமாற்றத்தையும் இந்த அரசுக்கான வெறுப்புக்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏனைய நகர பகுதி மக்களோ மிகவும் சூட்சுமமான முறையில் பதில் கூறுகின்றார்கள், ஆக மொத்தத்தில் மலையக தலைவர்கள் எடுத்த முடிவிற்கு மாறுப்பட்ட விதத்திலேயே மக்களின் முடிவு அமைந்துள்ளது. இது முழு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கருத்தக்கு ஏற்றாற்போல் இருக்கின்றது.

சிங்கள தலைமைகளோ தமிழ் மக்களின் வாக்குகளை அலட்சியப்படுத்துவதோடு அவர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறைகளையே தேடி அலைந்து கொண்டு இருக்கின்றது எனலாம்.

தமிழ் மக்களுக்கும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தான் ஜனாதிபதி என்றாலும் இந்த இரு பிரதான வேட்பாளர்களும் இம்மக்களின் தலைமைகளை புறக்கணித்து மக்களிடம் நேரடியாக சென்று வாக்குகளை எந்த விதத்திலாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே உள்ளது. (பயமுறுத்தலாகவும் மாறலாம்) இது ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் நமது தலைமைகளை முற்றாக உதாசீனப்படுத்துவதற்குறிய காரணியாகலாம்.

தலைமைகளை ஒதுக்கிவிட்டு மக்களிடம் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி தலைமைத்துவத்தை முற்றாக புறக்கணித்தால் இந்த மக்களுக்கு நாளை ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையை தலைமைகளுக்குள் உண்டுபண்ணி விடலாம் என்பதே உள்கருத்தாகும். இதனால் நம் இன மக்கள் பல பின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் தேர்தலாகவும் இது மாறலாம்.

இதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளை மிக நீண்ட நாட்களாகவே இந்த சிங்கள தலைமைகள் செய்து வந்திருக்க வேண்டும் ஆனால் ஒரே கட்சியில் இருக்கும் இருவரும் இன்று எதிர்த்து போட்டியிடுவதால் இந்த இருவரும் சேர்ந்தே நாம் முதலி்ல் குறிப்பிடுகின்ற செயல்பாட்டுத் திட்டங்களை செய்ய முடிவு செய்திருக்கலாம்.

அதனால் தான் இருவருமே இந்நாட்டின் இரண்டாவது பெரும்பான்மையான தமிழ் மக்களை ஓரம் கட்டி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

சற்றும் எதிர்பாராது, ஒரே கட்சியின் இரு முக்கிய பதவிகளை ஏற்றிருந்த இரு வேட்பாளர்களிடையிலான போட்டி, தமிழ் இனத்திற்கு சற்று சிந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது இனமும் தலைமைகளும் கவனமாக பரிசீலனை செய்து தங்களின் முடிவை வெளியிட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இவர்கள் இருவருமே நம்மிடம் ஆதரவை கோரும் சூழ் நிலையை நமது தலைமைகள் உருவாக்க வேண்டும். அதன் மூலம் நமது தலைமைகள் அவர்களிடம் நமது நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.

தேர்தல் நடைபெற இன்னும் 3 வாரங்கள் இருக்க நம் தலைவர்கள் இது சம்பந்தமாக முடிவு செய்ய வேண்டிய மாபெரும் கடமை அவர்களுக்கு ஏற்ப்டடுவிட்டது.

இல்லையேல் நாம் உரிமைகளை பெரும்பாலும் பெரும்பான்மை மறுத்து நமது மக்களை உதாசீனப்படுத்தலாம், அது நம் நாட்டில் மட்டுமல்ல நமக்காக குரல் கொடுக்கும் சர்வ தேசமும் நம்மை மறக்க செய்யும் செயலாக இந்த சிங்கள தலைமைகள் உண்டு பண்ணலாம்.

ஆகவே நாம் சமாதானத்தை விரும்பினாலும் சிங்கள அடிப்படைவாதிகளின் வழியில் நம் இன மக்களை செல்லவிட்டால் அது நமது இன அழிவிற்கான அடுத்த கட்டமாகும்.

இப்பொழுது அரசியல் யதார்த்தத்தின் படி முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்த பெரும்பான்மையினம் ஏவப் போகின்ற அம்பாக சிறுபான்மையினத்தின் அடிவருடிகள் இருக்கப் போகின்றார்கள்.

தமிழினமோ ஏவியவன் பெரும்பான்மை, தாக்குபவன் தமிழன் இதுதான் இத்தேர்தலில் முடிவாகுமோ என சந்தேகம் மிளிரத் தொடங்குகின்றது.

இது தமிழ் மக்களின் மேல் தற்போது சர்வதேச மட்டத்தில் இருக்கும் அனுதாப அலையை, திசையை மாற்ற சிங்கள அடிப்படைவாதிகளுக்கு உதவப் போகும் தேர்தலாகவும் மாற்றமடையலாம்.

ஆகவே எமது தலைவர்கள் அவதானத்துடன் தங்களது அரசியல் காய்நகர்த்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது இக்கட்டுரையின் நோக்கமாகும்

-மகா

-http://www.tamilwin.com

TAGS: