ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்துக: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம்

uruthirakumaranஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ,பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோரும் தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த வாரம் நடந்து முடிந்த நாடுகடந்த தமீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்ட இருதீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் தமிழீழம் உள்ளடங்கியதான அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்து அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அத்தீர்மானம் அனைத்துலக சமூகத்திடம் கோரியுள்ளது.

இதவேளை புலம்பெயர்ந்தோர் தமிழர்அமைப்புகள் அனைத்திடமும், பொது வாக்கெடுப்புக் கோரி தீர்மானம் இயற்றுமாறும் அதற்கான பரப்புரைகளில் ஈடுபடுமாறும் அத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுமையான வடிவம் :

1. சனநாயகமே ஆட்சிமுறைகளுள் அதி உயரியது என்பதை அறிந்து கொண்டும்

2. அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் உரிமையே சனநாயகத்தின் அடித்தளம் என்பதைப் புரிந்து கொண்டும்

3. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று அனைத்துலக மனித உரிமைகள் பட்டயத்திலும் பன்னாட்டு குடியியல் அரசியல் உரிமைகள் பிரகடனத்திலும், ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு இணைவான சர்வதேச விதிகளின் அடிப்படையிலான நாடுகடளுக்கு இடையிலான நட்புறவும் ஒத்துழைப்பு தொடர்பான பட்டயத்திலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் 2625, ழுஉவழடிநச 24, 1970 தெரிவு செய்யும் உரிமை உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டும்

4. அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை, ஒரு மனிதன் எந்த அரசியல் குழுமத்தின் கீழ் வாழ விரும்புகிறான் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைக்கும் சமமாகப் பொருந்தும் என்பதை கருத்தில் எடுத்துக்கொண்டும்

5. எந்த அரசாங்கத்தின் கீழ் வாழ்வது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், எந்த அரசியல் குழுமத்திடன் வாழ்வது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அடிப்படை மனித உரிமை என்பதனைக் கவனத்தில் கொண்டும்

6. கொசாவா பொது வாக்கெடுப்பு, தெற்கு சூடான் பொது வாக்கெடுப்பு, செர்பியா பொது வாக்கெடுப்பு, புனித வெள்ளி உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்ட இனி நடக்கவிருக்கிற வட அயர்லாந்து வாக்கெடுப்பு மற்றும் போகன்வில் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றைக் குறித்துக் கொண்டும்

7. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்புக்கு பிரித்தானிய அரசு கொடுத்த ஒத்துழைப்புக்கும் அதன் அரசியல் முதிர்ச்சிக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டும்

8. தேசிய முரண்களைத் தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையாக பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும்

9. 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சுதந்திர, மதச்சார்பற்ற இறையாண்மை உள்ள ஒரு அரசை அமைப்பதற்கு தமிழ் மக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஆணையிட்டதும், அது, 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியாக, பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டும்

10. முற்று முழுதாகச் சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது கொன்றொழிக்கப்பட்டனர் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொண்டும்

11. தனது குடிமக்களைப் பாதுகாப்பதும் பேணுவதுமான சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடு பரிகாரநீதியின் சட்டபூர்வமானதும் தார்மீகரீதியானதுமான வெளிப்பாடு என்பதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும்

12. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதன் அரசியல் யாப்பில் உறுதிசெய்யப்பட்டவாறு, சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழம் என்ற நாட்டை அமைக்கப் பாடுபடும் என்பதனை மீளவும் உறுதி செய்துகொண்டும்

13. இலங்கைத்தீவில் வசிக்கும் தமிழ்மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்குப் பொதுசன வாக்கெடுப்புக் கோருகிறார்கள் என்ற 2012ம் ஆண்டு டிசம்பரில் பவ்லோ நகரில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்ற அமர்வின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மீள நினைவில் நிறுத்திக் கொண்டும்

14. ஈழத்தமிழர்கள் தம் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை மனதில் இருத்திக்கொண்டும்

15. தமிழ்த்தேசியப் போராட்டம் சர்வதேச பரிமாணத்தைப் பெருமளவு அடைந்து வருவதை அங்கீகரித்துக் கொண்டும்

16. சர்வதேச அரங்கத்தில் ஒரு காத்திரமான செயல்பாட்டை சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒரு வலுமிக்க அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்பதைம் கவனத்தில் எடுத்துக் கொண்டும்

17. ஒரு வலுமிக்க அரசியல் சக்தியாக மாறுவதற்கு ஒரு ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை என்பதையும் அங்கீகரித்துக் கொண்டும்

இவ்வாறாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒருமனதாகத் தீர்மானம் எடுத்துக் கொள்கிறது:

I. தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் தமிழீழம் உள்ளடங்கியதான அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்து அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றது.

II. புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் அனைத்திடமும், பொது வாக்கெடுப்புக் கோரி தீர்மானம் இயற்றுமாறும் அதற்கான பரப்புரைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

III. உலகெங்கும் உள்ள மத்திய மாநில அரசுகளையும், அரசியல் கட்சிகளையும், இலங்கைத்தீவில் நிலவும் தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கு நிலையான அரசியல் தீர்வுக்காக இவ்வாறான தீர்மானத்தினை நிறைவேற்றவும் கோருகின்றது.

IV. அனைத்துலக அரசுசாரா அமைப்புக்களையும், குடிசார் சமூகத்தையும் இத்தீர்மானத்தினை ஆதரிக்கும்படி கோருகின்றது.

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilcnnlk.com

TAGS: