ரணில், மைத்திரி, சந்திரிக்காவிடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்க வலியுறுத்தி திகா, ராதா, மனோ கோரிக்கை

dhiga_meeting_001தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் காணி வழங்குமாறு வலியுறுத்தி எதிரணியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா அம்மையாரிடம் திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் மனோ கணேசன் முன்வைத்துதுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து காணி உரிமையுடன் தனித்தனி வீதிகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோது, மாடி வீட்டு திட்டதையே முன்வைத்தார்கள்.

அது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதை தெரிவித்தோம் அதற்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

எனவே, இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியிடம் நாங்கள் முன்வைத்தபோது அதை ஏற்றுக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வெளியிட ஒப்புதல் வழங்கினார்கள்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்கள், அமைப்பாளர்கள் முதலானோருக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் நேற்று அட்டன் டி. கே. டபுள்யூ. கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தலைமை வகித்து பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, பொது செயலாளர் எஸ். பிலிப். உபதலைவர் ஜி. நகுலேஸ்வரன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது நான் கட்சி மாறி விட்டதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றார்கள். அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. நான் தொழிலாளர் தேசிய சங்கத்தில் தான் இருக்கின்றேன்.

அதுதான் எனது கட்சியாகும். அதில் இருந்து கொண்டே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குகின்றேன்.

இது நானாக எடுத்த முடிவல்ல. நாட்டு மக்கள் எடுத்துள்ள முடிவுக்கு ஏற்ப மலையக மக்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதை ஏற்றுக் கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம். நான், அரசாங்கத்திலிருந்து விலகியதால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு இப்போது இல்லை.

இருந்தும் மக்கள் எனக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களின் பாதுகாப்பு ஒன்றே போதுமானதாகும். அரசாங்கம் எனக்கு 150 கோடி வழங்க முன்வந்ததாக சிலர் கூறுகின்றார்கள்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்கே இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்காத அரசாங்கம் எனக்கா இவ்வளவு பெரியதொகையை வழங்கப் போகின்றது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மீரியபெத்தை தோட்டத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பிறகுதான் அரசாங்கத்திற்கு மீரியபெத்த மக்கள் நினைவுக்கு வந்துள்ளார்கள் கடந்த வாரத்தில் அங்கு வீடமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதேபோல், டயகம தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ளதால், வேகமாக வேலைகள் நடைபெறுவதாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்கின்றார்கள். என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மலையக மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயாராகி விட்டார்கள்.

அவர் பதவியேற்ற பிறகு தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற உன்னதமான நிலைமை நிச்சயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு மைத்திரிபால சிறிசேனவின் சின்னமான “அன்னம்” புதிய ஒரு சின்னமல்ல.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அந்த சின்னத்துக்கு வாக்களித்து அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

எனவே, எதிவரும் ஜனாதிபதித் தேர்தலிலும் கடந்த தேர்தலை விட அதிகளவில் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை அமோக வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

அது ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வெற்றி விழாவாக அமையும் என்பதே உண்மையாகும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: