தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை மீண்டுமொரு முறை அடைவு வைக்கும் வகையினில் தெற்கிற்கு கைதூக்கியுள்ளது கூட்டமைப்பு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிக்கு நிபந்தனை ஏதுமற்ற ஆதரவை வழங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. நேற்று கொழும்பில் எதிரணி தலைவர்களை சந்தித்த கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் நிபந்தனை ஏதுமின்றி தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தரப்புக்கள் பற்றி ஏதும் பிரஸ்தாபிக்கப்படாமை பற்றி கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தரப்பில் மனஸ்தாபம் தெரிவிக்கப்பட்டது. எனினும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆலோசனையின் பெயரிலேயே தமிழ் தரப்புக்கள் பற்றி பகிரங்கமாக ஏதும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லையென எதிரணி தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் பிரகாரம் கூட்டமைப்பின் தேர்தல் முகவர்களாக யாழ்ப்பாணத்திற்கு சட்டத்தரணி நவநாதனும், வன்னிக்கு வவுனியாவை சேர்ந்த சேனாதிராசாவும், மட்டக்களப்பிற்கு கௌரிசங்கரனும் நியமிக்கப்பட்டு பெயர்விபரங்கள் எதிரணி தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனிடையே தற்போது இந்தியாவில் தங்கியுள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் 26ம் திகதி இலங்கை திரும்பியபின்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பினை அவர் வெளியிடுவாரெனவும் தெரியவருகின்றது. ஏற்கனவே தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை தெரிந்ததே.
-http://www.pathivu.com