தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப் பலம் ஒன்று தான்!

rajesvaran-5-60x60தமிழ் மக்களின் பலத்தைக் காட்டும் முக்கிய தருணம் இது. தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப்பலம் ஒன்று தான். எனவே அவ்வாக்குப் பலத்தை சரியாகப் பாவித்து தமிழர் தரப்பிற்கு பலம் சேர்க்க வேண்டும். முடிவுகள் எமக்குச் சாதகமாக வரும் சூழ்நிலையே தெரிகிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

காரைதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹங்கர்பிறி வேர்ல்ட் பவுண்டேசனின் அரிசிப் பொதிகளை வழங்கிவைத்த பின் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமையில் அரசியல் கதைக்க விரும்பவில்லை. எனினும் தேர்தலொன்று நெருங்கி வருகிறது. எனவே இந்த இடத்தில் ஒரு சில விடயங்களை கூறி வைக்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளேன். அதற்காக மன்னிக்கவும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிப்பில் 100 வீதம் கலந்து கொள்ள வேண்டுமென எமது கட்சிப்பீடம் அறிவித்துள்ளது. எனவே நான் பிரதிநிதித்துவப்படுததும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும்.

மிகவிரைவில் எமது கட்சித் தலைமைப்பீடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை அறிவிக்கும். அதனிடையில் நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பதற்கு தயாராக வேண்டும்.

எனவே யார் ஆண்டாலென்ன என்ற பாணியில் அலட்சியமாகவோ அல்லது பகிஸ்கரிப்பிலோ ஈடுபட வேண்டாம் என மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இம்முறை ஜனாதிபதிதேர்தல் முன்னொருபோதுமில்லாத வகையில் புதிய பரிமாணத்தை எடுத்திருக்கிறது. எமது ஆதரவு பெற்றவர்களே ஜனாதிபதியாக வரக்கூடிய களநிலை இருக்கிறது.

அம்பாறை மாவட்ட தமிழர்கள் எதிரிகளாலும் நம்மவர்களினாலும் பல வகைகளில் கடந்தகாலங்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனை ஜனாதிபதியோ அரசாங்கமோ அல்லது அதில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இது தொடர்பில் தமிழ்மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு தக்கபாடத்தை இறைவன் காண்பித்துக் கொண்டிருக்கிறான். எனவே இத்தேர்தலை நாம் பயன்படுத்தி உரிய பலத்துடன் பயனடைய முற்பட வேண்டும்.

இது தொடர்பில் மாவட்டரீதியாக கட்சித் தலைமைப்பீடம் கருத்தறிந்து சென்றுள்ளது. அதற்கு மேலதிகமாக மாவட்டரீதியில் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டங்களை உள்ளுர் தலைவர்கள் கூட்டி வருகின்றனர்.

ஓரிரு நாட்களில் முடிவு தெரிய வந்ததும் தேர்தல் பரப்புரைகள் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. என்றார்.

காரைதீவு நிருபர்-

-http://www.tamilcnnlk.com

TAGS: