ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது: சிவாஜிலிங்கம்

sivajilingam-001ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை த.தே.கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாதென வலியுறுத்தியிருக்கும் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் தாங்களே சிந்தித்துச் செயற்படட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலின் போதான தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் தெளிவாகச் செய்து காட்டியுள்ளமை போன்று மக்களும் தமது முடிவைச் செய்து காட்டக் காத்து இருக்கின்றனர்.

இத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எமக்கு எந்த நம்மையும் கிடைக்காது. நாம் எமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது இலங்கையின் 7வது ஐனாதிபதித் தேர்தலாகவே அமைகின்றது.

இதில் கடந்த தேர்தலில் நடந்ததை மறக்காது இத்தேர்தலிலும் செயற்பட வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கின்றது. அதாவது 2010 ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.

அதனைப் பயன்படுத்திக் கொண்ட மற்றைய வேட்பாளரான மகிந்த ராஐபக்ஷ தரப்பினர்கள் இனவாதத்தைத் தூண்டி வெற்றியும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த முறை தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதுமே குறிப்பிடவில்லை.

அத்தோடு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக இல்லை. எமது கோரிக்கைளை எதிர்க்கும் வகையிலையே கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

குறிப்பாக போர்க்குற்றங்கள் தொடர்பில் எவருமே ஏதும் கூறவில்லை. போர்க்குற்ற விசாரணைகளிற்கு இடமளிக்கப் பொவதில்லை என்று மாறி மாறி கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

அரசியலமைப்பை மாற்றி சமஷ்டியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் மறுக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில யாரை ஆதரித்தாலும் அது எமக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: