தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மைத்ரிபாலவுக்கு ஆதரவு

tnamythiri

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்

 

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மைத்ரிபால சிறிசேனா இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சூழலில் அவருக்கு ஆதரவு என்கிற தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னனி, ஐக்கியத் தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. -BBC

மைத்ரியுடன் உடன்பாடு எழுத்தில் இல்லை, ஆனால் நம்பிக்கை உள்ளது: சம்பந்தர்

sambanthar_tnaஇலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்து அறிவித்துள்ளது.

எனினும் இதுதொடர்பில் அவருடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் இல்லை என்றாலும் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்.

மைத்ரிபாலவை ஆதரிக்கும் எதிரணியில் பௌத்த கடும்போக்கு கொள்கைகளை உடைய கட்சிகள் இருக்கின்றன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதகவும் சம்பந்தர் கூறுகிறார்.

நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தாங்கள் விவாதித்துள்ள விஷயங்கள் மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன, ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ளாமால் அவர் வீணடித்துவிட்டார் எனவும் சம்பந்தர் கூறினார். -BBC

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ananthi_sasitharan
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது.

வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினரும், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவருமாகிய எழிலன் எனப்படும் சசிதரன் மனைவியுமாகிய அனந்தி சசிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். -BBC

TAGS: