தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பானது பேயிட மிருந்து பிடுங்கி பிசாசிடம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்

kovuthamசிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழின அழிப்பின் பங்காளிகளும் இன அழிப்பை நேரடியாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர்களே.

தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட எமது பல சகோதரிகள் சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ,ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை, பல ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதை, போர் வெற்றியென்று கூறி அந்த வெற்றிக்கு தாங்களே காரணமென சிங்கள மக்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் அதே சிங்கள இனவாதிகள் தான் இன்று தமிழ் மக்கள் முன் அனைத்தையும் மறந்து, மறைத்து தங்களை இந்த தேர்தலில் வெற்றி பெறவையுங்கள் என வாசல் தேடி வந்துள்ளனர்.

யாரிவர்கள் ?எறிகணைக் குண்டுகளால் எம்மவர்களை கொன்றவர்கள்.

வீதி வீதியாக்  வந்து நின்று கொன்றவனை விருந்தாளியாக்கச் சொல்கின்றனரா?

சிங்கள தேசத்தின் வேசங்களையும் மோசங்களையும் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை காலம் தேவை இவர்களுக்கு.

சிங்கள தேசத்தில் நடந்த எந்த தலைமை மாற்றமும் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்ததில்லை. மாறாக அழிவுகளையே அதிகப்படுத்தியுள்ளன. எனவே மாற்றம் வேண்டி மைத்திரி பாலவை ஆதரிப்பதாக சொல்லப்படுவது அர்தமற்றது.

அத்துடன் இன்று சிங்களப் பேரினவாதிகள் அனைவரும் ஒருபெரும் சக்தியாக ஒரேஅணியில் திரண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. எதிர் காலத்தில் தழிழீழ விடுதலைப் போரட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலையும் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பானது பேயிட மிருந்து  பிடுங்கி பிசாசிடம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

எந்த சிங்கள தலைமைகள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கப் போதில்லை. இன அழிப்பையும் சிங்கள மயமாக்கலையும்நிறுத்தப் போவதில்லை.

பல ஆண்டுகளாக சிறைகளிலே வாடும் உறவுகளை விடுவிக்கப்போவதில்லை என்பதே உண்மை.

பல ஒப்பந்தங்களையே கிழித்தெறிந்து இனவழிப்பைச் செய்த சிங்கள அரசுகள் வாய்மொழி உத்தரவாதங்களை  (உள் ஒப்பந்தங்களை) எவ்வாறு கடைப்பிடிக்கும் என்பதும் பெரும் கேள்விக்குரியதே.

நடைபெறப்போவது சிங்களதேசத்திற்கான தேர்தல்.

தமிழர்களை அழிக்கவும் அடக்கு முறைக்குள் வைத்திருக்கவும் யார் சிறந்தவரென சிங்கள மக்கள்  தமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

எமது மக்களை  எனது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் அறிவுசார்ந்த மனிதர்களாகவே வளர்த்துவைத்துள்ளார். வாக்களிப்பதா வேண்டாமா என்பதை அவர்களே முடிவுசெய்யட்டும்.

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்

-நன்றி-
அன்புடன்
வ.கௌதமன்

-http://www.pathivu.com

TAGS: