ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

rajapaksa1ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, ஜனக பண்டார தென்னகோன், ரெஜினோல்ட் குரே, குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. நாவின்ன ஆகியோரும், பிரதியமைச்சர்களான சனத் ஜயசூரிய, லசந்த அலகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிரணியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வரும் நாட்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் சந்தித்து எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் கட்சி தாவலைத் தொடர்ந்து ஆளுங்கட்சியில் இருந்து பெருந்தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே தடவையில் கட்சிதாவும் முடிவில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் பிரகாரம் கடைசி நேரத்தில் அதாவது 8ம் திகதியை நெருங்கிய நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தன் பரிவாரங்களுடன் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்தும் தனது அமைச்சுப் பதவிக்குரிய வசதிகளைப் பாதுகாத்துக் கொள்வது அவரது நோக்கமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மகிந்தவா… மைத்திரிபாலவா? – இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் தேர்தல் திருவிழா ஆரவாரத்துடன் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய இலங்கை அதிபர் ராஜபக்‌சவை எதிர்த்து ஓரணியில் திரள ஆரம்பத்திருக்கின்றன.

அங்குள்ள எதிர்க் கட்சிகள். முன்னர், ராஜபக்‌ச அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்​சராக இருந்த மைத்திரிபால சிறீசேன, அனைத்துக் கட்சிகளாலும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருக்கத்தில், ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தூதுவிட்டு காத்திருந்தனர்.

ராஜபக்‌ச அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களுடனான உறவு சுமுகமாகவே இருக்கும் என்று எண்ணியது ராஜபக்‌ச தரப்பு.

ஆனால், மைத்திரிபால சிறீசேன பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே ராஜபக்‌ச அமைச்சரவையில் அங்கம் வகித்த தமிழ் எம்.பிக்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ராஜபக்‌சவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

மேலும், மைத்திரிபால சிறீசேனவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். அதை ராஜபக்‌ச எதிர்பார்க்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை ராஜபக்‌சவை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

”யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்னும் மறு குடியமர்த்தம் செய்யப்​படவில்லை. அவர்களுக்கு வீடுகளோ வாழ்வாதாரங்களோ பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

மாறாக, ஆயிரக்கணக்கான தனியார் காணிகளை ராஜபக்‌ச அரசு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. சுயமரியாதையும் இல்லை. பெண்களும் பிள்ளைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

ராஜபக்‌ச அரசு தமிழ் மக்களுக்கு மோசமான துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே வழங்கி உள்ளது. இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் குழுக்களுக்கு ஊக்கமளித்து வேடிக்கை பார்க்கிறது.

இன்னமும் தான் நடத்திய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. ‘நிறைவேற்று’ அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறையினால் இலங்கையில் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. ராஜபக்‌சவின் அரசாங்கத்தில் நாடாளுமன்றம் மதிப்பிழந்து போய் உள்ளது.

பணத்தைக் காட்டி எதிர்க் கட்சி உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்று அதனைப் பயன்படுத்தி நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இன்று எமது நாடாளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பொம்மை​யாக மாறிக்கிடக்கின்றது.

அரசியலமைப்பின் 17-வது சட்டத்திருத்தத்தை மாற்றியதன் மூலம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, கணக்காய்வாளர், நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார்.

இது நாட்டுக்கு மிகப்பெரிய கேட்டையும் ஆபத்தையும் விளைவிக்கும். இந்த அமைப்பு முறை ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் தகவல் பரிமாறும் சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

ராஜபக்‌ச அரசாங்கம் எப்போதும் தமிழர்களுக்கு பாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தேர்தல் மூலம் ‘நிறைவேற்று’ அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது சட்டத் திருத்தத்தை நீக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் உன்னத நோக்கத்தில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு களம் இறங்கி உள்ளது.

எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடைய பொது எதிரணி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷே அரசை தோற்கடிக்க வேண்டும்” என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார்கள்.

இதுகுறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் பேசினோம். ”எங்கள் மனதுக்குள் இருந்த கருத்துகளைத்தான் அந்த அறிக்கை பிரதிபலிக்கின்றது. ராஜபக்‌ஷேவை எதிர்த்துப் போட்டியிடும் மைத்திரிபால சிறீசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். மாற்றத்துக்கான தேர்தலாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தல் வரவிருப்பதால் தமிழர்கள் மீது ராஜபக்‌சவுக்கு திடீர் அக்கறை பிறந்துள்ளது.

யுத்தம் முடிந்த பிறகும் இலங்கையின் உண்மை நிலையை உலகத்துக்கு மறைத்தது எதனால்? மனித உரிமைகளை நிலைநாட்டி தமிழர்கள், சிங்களவர்கள் என்ற வேற்றுமைகளைக் களைந்து இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் சரிசமமான ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ராஜபக்‌சவுக்கு மாற்றாக மைத்திரிபால் சிறீசேன இருப்பார் என் நம்புகிறோம்” என்றார் அவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்க் கட்சியான ரணில் விக்கிரமசிங்காவின், ‘ஐக்கிய தேசிய கட்சி’ உட்பட 49 கட்சிகளின் ஆதரவோடு களத்தில் இறங்கியிருக்கிறார் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறீசேன.

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே ராஜபக்‌ச ஜனாதிபதியாக இருந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியிலிருந்து 25 உறுப்பினர்கள் விலகி எதிர்க் கட்சிக்கு தாவியது இதுதான் முதல் முறை. இதனால், நாளுக்கு நாள் மைத்திரிபால சிறீசேனவின் ஆதரவு வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன.

வவுனியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலும் பேசிய மைத்திரிபால சிறீசேன, ”இத்தனை ஆண்டுகளில் ராஜ்பக்ஷேவின் குடும்பம் பெருமளவில் பயன் அடைந்திருக்கிறது. இந்த நிலை, முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு மத வழிபாட்டுக்கான சுதந்திரமும், பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும். அதிகார வெறியில் திளைத்து, ஊழலில் மலிந்து மோசடிகளை தடுப்பதற்காக ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக குறைக்கப்படும்” என்று சூளுரைத்திருக்கிறார்.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க இலங்கை அதிபர் ராஜபக்‌சவின் கூடாரம் காலியாகி வருகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: