ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மற்றும் தமிழக தமிழ் அமைப்புகள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் நடைபெறவுள்ள தேர்தல் விடையத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு தமது ஒருங்கிணைந்த அதிருப்தியை பின்வருமாறு தெரிவித்துள்ளனர் .
“சனவரி 8 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சிங்களத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இரு பிரதான சிங்களத் தலைவர்களும் ஐநா விசாரணைக்கு எதிராகப் புனைந்துள்ள எதேச்சாதிகாரமான பிரகடனங்களை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக, தமிழருக்கான அரசியற்தீர்வு எதனையும் எந்தத் தரப்பும் முன்வைக்கவில்லை. சிங்கள மேலாண்மை சார்ந்த சிறிலங்கா அரசியல் வரலாற்றுக்கு அமைவாக, இரு வேட்பாளர்களுமே சிங்கள இனத்தின் “நிரந்தர பெரும்பான்மை”ப் போக்கை நிலைநிறுத்தி அதன்மூலம் தமிழர்களின் வலுநீர்த்து அவர்களை ஓரங்கட்ட முனைந்துள்ளனர். அரசாங்கத்தை மாற்றுவதால் மட்டுமன்றி, அரசின் அடிக்கட்டமைப்பையே மாற்றுவதன் மூலமே உண்மையான மக்களாட்சியையும், நிரந்தரமான அமைதியையும் இந்தத் தீவிலே ஏற்படுத்தமுடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.”
“மே 2009 போர் முடிவுற்றதிலிருந்து, சிறிலங்கா அரசானது தமிழ்த்தேசத்தைத் துரிதகதியில் அழித்தொழிக்கத் தலைப்பட்டுள்ளது. வலிந்து திணிக்கப்படும் குடியியற் பரம்பல் மாற்றங்கள், தமிழருக்குச் சொந்தமான நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், மதச் சடங்குகளைக் குழப்பி வழிபாட்டுத் தலங்களையும் அழித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்குதல், தொடரும் கொடுவதைகள்,காணாமற்போதல்கள், மூச்சடைக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு என்பனவாக இனப்படுகொலை இன்னும் நீட்டிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தப் புறச்சூழலில், சிறிலங்காவின் இனஅழிப்பு நடவடிக்கையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய இடைக்காலப் பொறிமுறை ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தைக் கோரி நிற்கிறோம். மேலும், தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை முன்னெடுத்து ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கச் சாதகமான சூழலை ஏற்படுத்துமாறும் வேண்டுகின்றோம்” எனவும் கூறியுள்ளனர்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே 60 க்கும் மேற்பட்ட உலகளாவிய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அறிக்கை பார்க்கப்படவேண்டும்.
-http://pathivu.com/