‘மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்ப வேண்டும்’: மைத்திரி

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

colombo_protest
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் நினைவாக நடத்தப்பட்ட போராட்டம் ஒன்று

 

அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்பவேண்டும் என்றும் புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாற்றுக்கருத்துள்ள இணையதளங்கள் மீதான தணிக்கையை உடனடியாக நீக்குவதற்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது நிறுத்தப்படுவதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுக் கருத்தாளர்களுக்கு இடமளிக்காமல் அவர்களை ஒடுக்கியதாக பதவியிழந்து சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெருமளவிலான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

‘மகிந்த இராணுவத்தின் உதவியை நாடினார்’

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தேர்தல் தோல்விக்குப் பின்னரும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு இராணுவத்தின் உதவியை கோரியிருந்ததாகவும் அதற்கு இராணுவம் மறுத்துவிட்டதாகவும் புதிய அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் இராணுவத்திடமிருந்து அதுதொடர்பில் கருத்தெதுவும் கிடைக்கப்பெறவில்லை. -BBC

TAGS: