‘மைத்திரி அரசாங்கம் நல்லெண்ணத்தை செயலில் காட்டவேண்டும்’

tna_sri_lankaஇலங்கையில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலான வெற்றியைப் புரிந்து கொண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், செயல் வடிவில் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 9 தமிழர்களின் 41 வது வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் மக்கள் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, புதிய அரசாங்கம் தனது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டிய காலகட்டம் இது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கும் சொந்த இடங்களுக்குச் செல்லாமல் உள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நல்லுறவை வலுப்படுத்துவதுடன் சுமுகமாக பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்ககான ஓர் உந்து சக்தியாக அமையும் என்றும் சுரேஸ் கூறினார்.

புதிய ஜனாதிபதியின் தலைமையில் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா என கேட்டதற்கு, அது குறித்த தேவை இப்போது எழுந்திருக்கின்றதா என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று அவர் பதிலளித்துள்ளார்.

‘புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிர்சசினைகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் 3 மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூடிப் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனியன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். -BBC

TAGS: