தமிழ் மக்களின் குறைகளை அனைத்துலகத்திடம் கூறுவதில் தவறில்லை

அமெரிக்காவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளை கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி;

இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் இலங்கை அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படையான போக்கோ கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சியாகும்.

மேலும், அனைத்துலக நிலையில் அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கான பயணத்தை  மேற்கொண்டுள்ளது. கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றது. இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பொதுவானதாகும்.

எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா சென்றமை அல்லது ஏனைய நாடுகளுக்கு செல்கின்றமை, தமது நிலைப்பாடுகளை அனைத்துலகத்திற்கு எடுத்துச் சொல்கின்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல எந்தவொரு கட்சியும் ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களுக்கே உரிய ஜனநாயக உரிமையாகும். அதனைக் கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ முடியாது.

தமிழ் மக்களின் விடயம்  குறித்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் இலங்கை அரசாங்கம் தவறிழைத்து விட்டமையே இவ்விவகாரம் அனைத்துலக மட்டத்துக்கு சென்றிருப்பதற்கும் அனைத்துலக நாடுகள் எமது விடயங்களில் மூக்கை நுழைப்பதற்கும் அடிப்படைக் காரணமாகும் என்றார் அவர்.

TAGS: