மைத்திரியும் ரணிலும் சேர்ந்து மந்திரி சபையை அமைத்தாலும் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும். இப்போது தொண்டமானுக்கும், ஏனைய ‘மனம் மாறாத’ மகிந்த விசுவாச எம்.பிக்களுக்கும் சந்திரிகா வலைவீசிக் கொண்டிருக்கிறார். ஆறுமுகன் சென்னைக்கு எஸ்கேப். முதல் விசிட் இந்தியாவிற்கு என்று சொல்லியிருக்கிறார் ‘ஜனநாயகக் காவலன்’ மைத்திரி. அனேகமாக எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவலாம்.
மைத்திரியின் தேர்தல் வாக்குறுதியில் முதல் சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது. மந்திரிகளின் எண்ணிக்கை 25 இலிருந்து 30 ஆக உயர்வு. இன்னும் பல சறுக்கல்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன. அடுத்து, தேசியப்பட்டியல் ஊடாக மகிந்தரும் வரப்போகிறார். துணை நின்ற தானைத் தளபதி தம்பிகள் நாட்டை விட்டு ஓடினாலும், மகிந்தரின் திமிர் அடங்கவில்லை. கோத்தாவின் நட்சத்திர துபாய் விடுதியில் பசில் தஞ்சம். அப்படியே அமெரிக்காவிற்குப் போகிறாராம். வாங்கிய தீவொன்றில் குடும்பத்துடன் கோத்தா. அண்ணன் நிலைமையைச் சீர்செய்தால், வெளிநாட்டுக் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு தம்பிகள் நாடு திரும்புவார்கள்.
தாயக அரசியலைப் பார்த்தால், இப்போதைக்கு மந்திரிசபையில் இணையத் தேவையில்லைஎன்று சம்பந்தனார் சொல்லிவிட்டார் போல் தெரிகிறது. அதனால் பதவிக்குக் காத்திருந்து, கங்குல் பகலாகக் கண்விழித்து ஓடியாடித் திரிந்த கனவான்களுக்கு தீராத சோகமாம். தேர்தலுக்கு முன் அமைச்சு பதவியைப் பெற்றால், உள்ளுக்குள் குழப்பம் உருவாகி ஏப்ரல் 20 (?)இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரிவு ஏற்படலாமென்று அரசியல் சாணக்கியர் சம்பந்தன் கணித்திருக்க வேண்டும். மறுபுறத்தில், கூட்டமைப்பு வராவிட்டால் ‘மூன்று’ மிச்சம் என்று பெருமூச்சு விடுகின்றாராம் சந்திரிக்கா. உள்குத்தைச் சமாளிக்க இந்த 3 உதவும்.
இருப்பினும், கூட்டமைப்போடும் ஏனைய தமிழ் அரசியல் கட்சித் தரப்புகளோடும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தாமல், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்வரை விலகிநிற்கவே மைத்திரி அணி விரும்பும். அதேவேளை கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சி ஏற்படுவதையும் விரும்பமாட்டார்கள். ஏனெனில் அதுவே, கிழக்கில் புலிகளின் ஆட்சி உருவாகிவிட்டது என்கிற எதிர்த்தரப்பின் இனவாதப்பிரச்சாரத்திற்கு வழிசமைத்து விடலாம். இந்த 100 நாட்களுக்குள், அதிகார,பதவிப்போட்டிகள் தீவிரமடையும். ஏனெனில், சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மகிந்த ராஜபக்ச. அவரின் அரசியல் நிலைபாட்டில் பௌத்த சிங்கள மேலாதிக்கக் கருத்து அதிகரிக்கும். அதற்கு ஈடு கொடுக்காவிட்டால், மைத்திரி அணியினர் ஆட்சி அமைக்க கூட்டமைப்பிலும், முஸ்லிம் காங்கிரசிலும், தொண்டமானிலும் தங்கியிருக்கும் நிலை ஏற்படலாம்.
இதுமட்டுமல்ல மகிந்தரை வீழ்த்த, அரசியல் எதிரியான இரணில் உடன் கூட்டுச் சேர்ந்த சந்திரிக்கா , மங்கள சமரவீராவின் துணையோடு தனது செல்வாக்கினை அதிகரிக்க முற்படும்போது விரிசல்கள் ஏற்படுமென எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், தற்போதைய நிலையில், ‘எம்.பிக்கள்’ வைத்திருக்கும் கட்சிகளுடன் மட்டுமே மைத்திரி அணி பேசும். 100 நாட்களைத் தாக்குப் பிடிப்பதற்கு இது அவசியம். இப்போது மைத்திரி அணிக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
1. மகிந்த பக்கத்து எம்.பிக்களை இழுத்து நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்.
2. ‘தேசிய அரசாங்கம் அமைப்போம் வாருங்கள்’ என்று மகிந்த எம்.பிக்களை உள்ளே இழுக்க வேண்டும்.
இந்த இரண்டாவது அறிவிப்பினை இன்று (11/1/2015) மைத்திரி வெளியிட்டுள்ளார்.
இதனைக் கடந்து செல்லும் போதுதான் பல மாறுதல்களை நாம் தரிசிப்போம்.
-http://www.athirvu.com