2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என கூறமுடியுமா? என மாணவன் ஒருவர் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர், அப்படியானால் 2010ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தபோதும் மஹிந்த ராஜபக்ஷதானே இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றார் என்று மாணவனைப் பார்த்துச் சொன்னார்.
எப்படி சாத்தியமானது
அதற்குப் பதிலளித்த மாணவன் 2010இல் சரத் பென்சேகா மஹிந்தவுக்கு எதிராக போட்டியிட்டாலும் அவரை தமிழ் மக்கள் பெரியளவில் விரும்பவில்லை. அத்துடன், யுத்தம் அழிக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைவதற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டமையினால் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக மஹிந்தவுக்கு வாக்களித்தனர் என்றும் சுட்டிக்காட்டினான். அப்போது மீண்டும் விளக்கமளித்த விரிவுரையாளர் மாணவனைப் பார்த்து நீ கூறியது சரிதான் என்று சொல்லி விட்டு மேலும் விளக்கமளித்தார்.
இரண்டு காரணங்களைக் கூறினார். ஒன்று – சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தவர். இறுதி யுத்தத்தை நடத்தியவர். ஆகவே, அவருக்கும் முள்ளிவாய்க்கால் அவலங்களுக்கும் தொடர்பு உண்டு என தமிழ் மக்கள் நினைத்திருப்பர். இரண்டாவது – சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தபோது உயர் பாதுகாப்பு வலயங்களைக் கூடுதலாக அமைத்து அங்கு மக்கள் குடியேற்றங்களை தடுத்தவர். இவ்வாறு சரத் பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியபோதும் பெருமளவில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. 2010 தேர்தலை விட 2015ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு கிழக்கில் வாக்களிப்பு வீதம் கூடுதலாக இருந்தது என்றும் விரிவுரையாளர் குறிப்பிட்டார்.
தோல்விக்கு காரணம்
மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியமைக்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அப்படி வாக்களித்திருந்தால் 2010ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டபோதும் தமிழ் மக்கள் அவருக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை. ஆகவே, இம்முறை மக்கள் உணர்வு ரீதியாக சிந்தித்து வாக்களித்தனர் என்று மாணவனிடம் சொன்னார். அத்துடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதை விட மஹிந்த ராஜபக்ஷவை விழுத்த வேண்டும் என்ற உணர்வு எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தமையும் ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இந்த உரையாடலை நோக்கும் போது தேர்தலில் வாக்களிக்கப்பட்டமை உணர்வு ரீதியானது என்பதும், அறிவு சார்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதையும் புரியக்கூடியதாகவுள்ளது. அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் உணர்வு சார்ந்துதான் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரியதா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆனால், கூட்டமைப்பை பொறுத்தவரை 2005ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலைப் புலிகள் எடுத்த நிலைப்பாட்டை போன்று தாங்களும் செயற்பட்டால் விடுதலைப் புலிகள் மீது சர்வதேச நாடுகள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு தாங்களும் உள்ளாகி விடுவோமோ? என்ற ஒரு அச்சத்தின் அடிப்படையிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கலாம்.
மக்கள் தீர்மானம்
ஆனாலும், மக்களைப் பொறுத்தவரை பொது எதிரணிக்கு வாக்களிப்பது என ஏற்கனவே தீர்மனித்து விட்டனர். சரத் பொன்சேகாவைப் போன்று மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியல்ல. தமிழ் மக்கள் சார்ந்து அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இருந்தபோதும் அவர் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் அவருக்கு அதிகப்படியான வாக்குகளை செலுத்தினர் என்ற முடிவுக்கு வரலாம். யார் வந்தாலும் இனப்பிரச்சினைக்கு அல்லது வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ கட்டமைப்பை மாற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது என்பதும் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயம்.
ஆனாலும், உணர்வு என்பது அதையும் தாண்டி மைத்திரிக்கு வாக்களித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை மாத்திரமே தமிழ் மக்களுக்கு இருந்தது. மக்களினுடைய இந்த உணர்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்கு தெரியும். அந்த அடிப்படையிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களியுங்கள் என கோரியிருக்கலாம். அதேவேளை, வட மாகாணத்தில் குறைந்தது 10 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகளாக இருக்கலாம் அல்லது மக்கள் தாங்களாக உணர்ந்து இரண்டு வேட்பாளர்களையும் நிராகரித்திருக்கலாம்.
தேசிய அரசு
எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற இரண்டு கட்சிகள் முன்னுள்ள பாரிய பொறுப்பு என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. தேசிய அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசியிருக்கின்றார். ஆதரவு வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முடியாது என சம்பந்தன் அடித்துக் கூறிவிட்டார் என்றும் தகவல். இருந்தபோதும் தேர்தலின் பின்னரான காலகட்டத்தில் கூட்டமைப்பு முன்பாக எழுகின்ற பாரிய கேள்விகளுக்கு உரிய பதிலை சம்பந்தன் வழங்கியாக வேண்டும்.
ஒன்று – அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் மேற்கொள்ளவுள்ள அணுகு முறைகள் தொடர்பானது. இரண்டாவது – ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் விசாரணை குறித்த விடயங்கள். இந்த இரண்டு பிரதான விடயங்கள் குறித்தும் கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துச் செயற்பட போகின்றதா? அல்லது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து நேர்மையான அரசியல் அணுகுமுறைக்கான மாற்றங்களை செய்யப் போகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
சர்வதேச நிலைப்பாடு
மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து விட்டார்கள். ஆகவே, அவர் தலைமையிலான அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை தயாரித்தால் எதிர்க்காலத்தில் தென்பகுதி அரசியல் கட்சிகள் போன்று செயற்பட வேண்டிய நிலை உருவாகும். தற்போது கூட கூட்டமைப்புக்கான ஆதரவுத் தளத்தில் மாற்றங்கள் எற்பட்டு வரும் நிலையில் வடக்கு – கிழக்கு மக்களுடைய சுதந்திர வேட்கை என்ற உணர்வுகளுக்கு மாறாக கூட்டமைப்பு நடந்து கொண்டால் மாற்று அணிகள் தோன்றக் கூடிய நிலையை அது தோற்றுவிக்கும்.
இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்தேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும் பலரிடம் உண்டு என்பதை கூட்டமைப்பு தெரிந்து கொள்ள வேண்டும்?
-நிக்சன்-
-http://www.pathivu.com