ஈழத் தமிழர்களின் தமிழர்களின் வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலன் ஓங்கி நிற்கும் புத்துணர்வோடு இவ்வாண்டின் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை பெருமையோடு கொண்டாடுவோம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் சர்வதேச ஊடகங்களுக்கும் தமது இயக்க உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேற்கண்டாவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவராலும் உவகையோடு கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நன்னாளில் எமது உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மனம் நிறைந்த பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாண்டுப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் உலகத் தமிழர்களுக்கு உவகை தரும் தினமாக இருக்கும் என்பது சந்தேகமேயில்லை.
அதே போல நமது தாயக மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் நமது ஈழத்தமிழ் உறவுகளைப் பொறுத்தளவில். இவ்வாண்டுப் பொங்கலும் புத்தாண்டு தினமும் பொங்கும் தமிழ் உணர்வோடும் உவகையோடும் கொண்டாடப்பட வேண்டிய நாளாகும்.
அதற்கு நமது பண்பாடு தொடர்பான காரணத்தை விட நமது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பலம் தொடர்பான ஒரு புத்துணர்வைத் தந்ததாக இவ்வாண்டு கொண்டாட்டம் அமைய வேண்டும் என்பதே திண்ணமாகும்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை இன அரசுகள் நமது ஈழத் தமிழ் மக்களின் கல்வியையும் அரசாங்க பதவிகளைப் பெறும் அடிப்படை உரிமைகளையும் பறித்தே வந்துள்ளன.
அதை விட மோசமான ஒரு தோல்வியையும் இழப்பையும் எமது இனம் 2009ம் ஆண்டு அனுபவித்தது மிகவும் கொடூரமான ஒரு யுத்தத்தை எத்pர்கொண்ட எமது இனம் உலக நாடுகள் பலவும் சேர்ந்து பின்னிய சதிவலையில் சிக்கியது.
இந்த சதிவலையின் எமது இனத்தை சிக்கவைத்து எம்மிடமிருந்த வீரத்தையும் பறித்தார்கள். அந்த நாள் தொடக்கம் வீரத்தை இழந்தவர்களாகவும் தன்மானத்தை பறிகொடுத்தவர்களாயும் நாம் வாடி வதங்கி நின்றோம்.
காலம் கனிந்தது. சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியின் தெரிவைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மிளிர்ந்த எமது இனத்தை, உலகத்தின் கண்கள் கண்டு வியந்தன என்பதே எமது அண்மைய வெற்றியாகும்.
எனவே இவ்வாண்டுப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் எமது உள்ளங்களை புத்துணர்வோடு எழுச்சி கொள்ளவைக்கும் பலம் கொண்டவையாகும்.
எமது தைப் பொங்கல் திருநாளும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் சாதாரணமாக பொங்கலைப் படைத்து விட்டு புத்தாடைகளை அணிந்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு பின்னர் உற்றார் உறிவினர்களின் இல்லங்களுக்கு சென்று உறவாடும் தினமாக மட்டும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுவந்த எமது ஈழத்தமிழ் இனம் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் பாதாளத்திற்குள் கொண்டு செல்லப்பட்டவர்களாக எம்மை மாற்றியது. எனவே புத்தாண்டு பிறந்துள்ள இந்த நேரத்தில் நாம் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
நமது தமிழ் மக்கள் அனைவரும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமய வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் வழ்pபாட்டுக் கீதங்களையும் தமிழ் மொழியிலேயே உரைக்கவும் இசைக்கவும் வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுகைள நாம் எடுக்கவேண்டும்.
இதன் மூலம் எமது எமது மொழியினதும் இனத்தினதும் பலத்தையும் இருப்பையும் இறுக்கமாக தக்கவைக்க முடியும். அதோடு நமது ஒற்றுமை மேலும் வலுவடையயும் வாய்ப்புண்டாகும்.
இவ்வாறான சிறப்புக்கள் பல கொண்ட இந்த புத்தாண்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பல திட்டங்களை முன்வைக்கப் போகின்றது என்ற நற்செய்தியையும் தமிழ் மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
எமது இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நமது தாயகம் சார்ந்து மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும் என்பதையும் நான் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.