வடக்கு, கிழக்கில் படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக்கு உரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முப்படைகளின் தளபதிகளும், ஏற்கனவே குழுவொன்றை அமைத்துள்ளனர்.
அத்துடன் அந்தப் பகுதிகளின் முறையான நில உரிமையாளர்களைக் கண்டறியும் பணியும் இடம்பெற்று வருகிறது.
முக்கியமான, பாதிக்கப்படக் கூடிய, முப்படைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய பகுதிகள் தவிர்ந்த பிற காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தனக்கும், முப்படைகளின் தளபதிகளுக்கும், ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வடக்கு, கிழக்கின் நிர்வாக கட்டமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் இடம்பெறும் என்று அறியப்படுகிறது.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர்ந்த, ஏனைய பொருட்கள் அனைத்தும், வடக்கு, கிழக்கிற்கும் அனுமதிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.