கொழும்பு, ஜன. 18- இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
‘ரா’ உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டதாக கொழும்பு மற்றும் டெல்லியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமல் சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தவுடன் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு இந்தியா கவலையடைந்ததாகவும், இதனால் உஷாராகி எதிர்க்கட்சியினரை ஓரணியில் திரள வைத்து ராஜபக்சேவை இந்தியா தோற்கடித்தாகவும் கூறப்படுகிறது.
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் சிறிசேனா வெற்றி பெறும் விதமாக, ரணிலை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதே போல் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் தொடர்பில் இருந்த அந்த ரா ஏஜெண்டு, சிறிசேனாவை தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்ள வைத்ததில் முக்கிய பங்காற்றினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை ரா ஏஜெண்டை விக்ரமசிங்கே சந்தித்திருப்பதாகவும், அப்போது இந்திய தூதர் அல்லது பிரதமரின் செய்தி தொடர்பாளர் ஆகியோர் உடனிருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை விக்ரமசிங்கேவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உண்மையான தகவல் கிடைக்கும் வரை, தான் யாரையும் சந்தேகப்பட விரும்பவில்லை என்று ராஜபக்சேவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
-http://www.maalaimalar.com