இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
கேள்வி: மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுத்தத்திற்குப் பின்னரான ஒரு முக்கிய பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கம் முழுமையாக மீள்குடியேற்றம் செய்துள்ளதாகக் கூறிய போதும், மக்கள் தற்பொழுதும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள்?
பதில்: இது ஒரு முக்கிய விடயமாகும். மீள் குடியமர்த்தப்படாமல் உள்ள மக்களின் விபரங்களை எனது அமைச்சிடம் நான் கோரியுள்ளேன். ஆனால், சில முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்த வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளதாக எனக்குத் தெரியவந்துள்ளது.
எனது அமைச்சிடம் உள்ளவர்களிடம் இவ்வளவு காலமாக ஏன் இந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை என்று நான் கேட்ட போது, பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர். பாதுகாப்பு அமைச்சின் இந்த முடிவால் சாதாரண மக்கள் பாதிக்கக்கூடாது.
எனவே பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையினை நான் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பாதுகாப்புப் பிரச்சினை இல்லாத பட்சத்தில் அவர்களை மீளக்குடியமர்த்த நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். முகாம்களில் இருக்கின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதே எனது முக்கிய கடமையாகும். இந்த விடயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே என்னால் முடிந்தவரை மீள் குடியேற்றப் பணியை நான் மேற்கொள்வேன்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளேன். மேலும், தான் சில நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கவுள்ளேன். எனவே, வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு நிச்சயம் கிடைக்கும்.
கேள்வி: குறித்த மக்களின் காணிகள் அரசாங்கத்தின் வசம் உள்ளமையினால், அவர்கள் தமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களைக் குடியமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு கையாளப் போகின்றீர்கள்?
பதில்: இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உறுதிப்பத்திரங்கள் அல்லது காணியை உறுதிப்படுத்தும் வேறு ஆவணங்கள் மக்களிடம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அந்தக் காணிகளை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு நான் முன்வருவேன்.
கேள்வி: வன்னிப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் இன்று அன்றாட தேவைகளுக்காகவும், உணவுக்காகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களா?
பதில்: வரவு செலவுத் திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஐந்து அமைச்சுக்கு 66 வீதம் நிதியை ஒதுக்கிவிட்டு, ஏனைய 38 அமைச்சுகளுக்கு 33வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இந்த வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு போதிய நிதி வசதி கிடைக்குமா என்பது சந்தேகமாகும். அவ்வாறு நிதி போதவில்லை என்றால் ஏனைய தொண்டு நிறுவனங்களினதும், வெளிநாடுகளினதும் உதவிகளையே நாங்கள் நாடவேண்டும்.
கேள்வி: கஷ்டங்களை எதிர்நோக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் தயாராக இருக்கின்றன. அவர்களின் உதவிகளை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்: அவ்வாறு உதவிகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் இருந்த போதும், புலம்பெயர் அமைப்புக்கள் என்று கூறினாலே பெரும்பான்மை இனத்தவர்கள் வெறுப்பைக் காட்டுகின்றனர். ஆகவே, இந்த விடயத்தை நன்கு திட்டமிட்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் மூலம் உதவிகள் கிடைக்கின்றன என்று நாங்கள் கூறும் போது, தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது எதிர்ப்பையே காட்டுவார்கள். ஆகவே, புலம்பெயர் அமைப்பு என்ற குறிப்பிட்டுக் கூறுவதை விடுத்து, வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் மூலம் வடக்கு மக்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்றால், அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அந்த அமைப்பு தகுதி வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
கேள்வி: வெளிநாட்டு அமைப்புக்களின் பண உதவிகளை வட மாகாண சபை நேரடியாகப் பெற்று மக்களுக்கு வழங்கக்கூடிய வசதிகளை நீங்கள் ஏற்படுத்திக் கொடுப்பீர்களா?
பதில்: அரசாங்கத்தின் அனுமதியுடன்தான் இவ்வாறான ஓர் பணப் பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும். எனவே இந்த விடயத்தில் நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் உறுதியாகத் தெரிவிக்க முடியாது. அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், வெளிநாட்டு நிதியுதவிகளை வடமாகாண சபைக்கு வழங்க நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். மாகாண சபைக்கு நேரடியாக நிதியுதவிகள் கிடைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
கேள்வி: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்: அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். ஆனால், மூன்று மாதங்களுக்குள் இந்த விடயங்கள் அனைத்தையும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகும். சுயதொழில்களை மேற்கொள்வதற்கான பயிற்சி நிலையங்களை அமைக்க முடியும். ஆனால் அதற்கு எமக்கு இருக்கின்ற கால அளவு மிகவும் குறுகியது. அதற்குள் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அதற்கு எட்டு மாதங்கள் அல்லது குறைந்தது ஆறு மாதங்களாவது தேவைப்படும்.
கேள்வி: இந்து சமய விவகார அமைச்சு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் எவ்வாறான பணிகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்?
பதில்: வட பகுதியை எடுத்துக் கொண்டால், அங்கு அழகானதும் சிறப்பு வாய்ந்ததுமான பல கோயில்கள் காணப்படுகின்றன. அதேவேளை, அந்தக் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் கிரியைகள் நடத்தப்படவேண்டும். அண்மையில்கூட வடபகுதியைச் சேர்ந்த சில இந்துமதத் தலைவர்கள் என்னைச் சந்தித்திருந்தார்கள். அப்போது, அவர்கள் ஆகம முறைப்படி ஆலயக் கடமைகளை மேற்கொள்வது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியிருந்தனர்.
எனவே இந்துமதம் தொடர்பிலான இவ்வாறான அடிப்படை நோக்கங்களை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் எண்ணியுள்ளேன். கோவில் வழிபாடுகள் சீராக இருந்தால்தான், அந்தச் சமுதாயம் சீராக இருக்கும். சமுதாயம் முன்னேறுவதற்கு கோவில் அவசியமாகும். கோவில் மட்டுமன்றி ஏதாவது ஒரு மத வழிபாட்டுத் தலங்கள் இருப்பது அவசியமாகும். எனவே ஆலய வழிபாடுகள் சிறப்பாகவும், சீராகவும் இடம்பெற வேண்டும். எனவே அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முன்னேஸ்வரம் ஆலயத்தின் இராஜ கோபுரத்தினை மீண்டும் கட்டுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்திருந்தார். இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்?
பதில்: அந்த ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் நினைத்தவாறு எதனையும் செய்ய முடியாது. முன்னேஸ்வரம் ஆலயம் ஆலய பரிபாலன சபையினால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இராஜ கோபுரம் கட்டும் பணி ஏன் நிறுத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.
அதேவேளை, இந்த ஆலயத்திற்கு புராதன காலத்திலேயே ஏன் இராஜ கோபுரம் கட்டப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டாலும், அதற்கான உதவிகளைச் செய்ய நான் தயாராகவே இருக்கின்றேன்.
கேள்வி: மதம் மாற்றப் பிரச்சினை தொடர்பில் நீங்கள் என்ன தீர்வைப்பெற எண்ணியுள்ளீர்கள்.?
பதில்: மதத்தினைச் சரியாகப் போதித்தால், இந்த மதமாற்றப் பிரச்சினை ஏற்படாது. இதற்காக நாங்கள் திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இந்து மதத்தைப் போதிக்க வேண்டும். அதற்காக பல அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம். அதன்மூலம், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்து மதத்தினுடைய முக்கியத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இந்து மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்தால் எப்போதுமே மதம் மாறமாட்டார்கள்.
-http://www.tamilwin.com
நேர்காணல் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. நல்லதே நடக்க நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்!