முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ள அவர், மூன்று கொலைகளுக்கு அவரே காரணம் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதிலொன்று லசந்தவின் கொலை. அவர் மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடியை மறுக்கும் கோத்தபாய!
தம்மீது சுமத்தப்பட்டுள்ள நிதிக் குற்றச்சாட்டுக்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மறுத்துள்ளார்.
இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் தமது பெயரில் 8 பில்லியன் ரூபாய்கள் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக வெளியான தகவலை அவர் நிராகரித்துள்ளார்.
ஏற்கனவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தப்ரபேன் வங்கிக்கிளையில் 7500 மில்லியன் பெறுமதியான பணம் கோத்தபாயவின் பெயரில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அந்த பணம் தற்போது திறைச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை அறிக்கை ஒன்றின் மூலம் மறுத்துள்ள கோத்தபாய, இலங்கை வங்கிக்கிளையில் பெலவத்த இராணுவ தலைமையக அமைப்புப் பணிகள் தொடர்பான கணக்குகளே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com