போர் குறித்த விசாரணைக்கு மைத்திரி ஒத்துழைப்பார்!– மங்கள சமரவீர

mangalaஎதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அவையுடன் ஒரு புரிந்துணர்வான நிலை எட்டப்பட்டு இறுதி யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணையே எடுக்கப்படும் என நம்புவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பத்திரிகையொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக சிலகாலம் பணியாற்றிய இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி சாட்சியமளிப்பாரா எனக் கேட்கப்பட்டதற்கு, ஆம் அவர் இலங்கையில் உள்ளக விசாரணை இடம்பெறும் பட்சத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று வெளிநாட்டமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுடன் தொடர்ச்சியாக உறவை இலங்கை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்த மங்கள, அடுத்த மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி இந்தியா வருவார் என்றும், அதற்கு அடுத்தபடியாக மார்ச் மாதத்தில் இந்தியாவின் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்றும் தெரிவித்தார்.

இலங்கை இந்தியாவிற்கு மிக அருகிலுள்ள நாடாக இருந்த போதிலும், 1987ம் ஆண்டிற்குப் பிறகு 28 வருடங்கள் கடந்து இலங்கைக்குச் செல்லும் முதற்பிரதமர் என்ற பெருமையை மோடி பொறுவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேண்டுகோள்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும், முதலாவதாக வட மாகாண ஆளுனரை மாற்றம் செய்ததாகவும், அடுத்ததாக ஐக்கிய நாடுகள் அவைக்கான பிரதிநிதியை மாற்றவுள்ளதாகவும் மங்கள குறிப்பிட்டார்.

13வது திருத்தச் சட்டத்திலுள்ள பெரும்பாலான விடயங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, இராணுவத் தேவைகளிற்காக அபகரிக்கப்பட்ட காணிகள் மீளக் கையளித்தல் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: