கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது.

அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை அதுதான்.

ஏனென்றால் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மார் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் மறுமணமும் செய்யாமல் பெரும் அவலத்திற்குள் சிக்கி தவிக்கிறார்கள்.

இனஅழிப்பு அரசு அவர்களது இருப்பு குறித்து எந்த பதிலும் தர மறுக்கிறது.

ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான். அந்தப் பெண்களை குறிவைப்பதன் ஆழமான அரசியல் பின்புலம் இன அழிப்பு சிந்தனைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.

கொல்லப்பட்டிருந்தால் அதைத்தன்னும் உறுதிப்படுத்து என்றே அவர்கள் கேட்கிறார்கள்.(உண்மையில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டு விட்டதே உண்மை) ஆனால் திட்டமிட்ட இன அழிப்பு நோக்குடன் அந்த பட்டியலை வெளியிடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது சிங்களம்.

இதனால் அந்த பெண்களினதும் அவர்கள் குழந்தைகளினதும் எதிர்காலம் குறித்து எதையும் சொல்ல முடியவில்லை. அவர்களில் பலர் தமது நிலையை உணர்ந்து மறுமணம் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் இறந்து விட்டார்களா என்று உறுதியாக தெரியாமல் எப்படி மறுமணம் செய்ய முடியும்?

இதனால் மே- 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது.

2009 இன அழிப்பை அடுத்து கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகள், அரை விதவைகள் ( Half widows) என்று கிட்டத்தட்ட எமது இனம் முடங்கிவிட்டது.

தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பில் எமது இனப்பரம்பலும் சனத்தொகையும் தான் சிங்களத்தால் நுட்பமாக குறிவைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதிதான் இந்த பட்டியலை வெளியிட மறுப்பதன் பின்னணியாகும்.

இனஅழிப்பு அரசு கட்டாய கருத்தடை தொடக்கம் காணாமல் போனவர்கள் குறித்து எந்த பதிலும் தராது எமது இனப் பெண்களின் பெரும்பகுதியை “அரை விதவைகள் ” என்ற சமூக நிலைக்குள் வைத்து தொடர்ந்து பேணுவதால் எமது பிறப்பு வீதம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

அண்மையில் யாழ். பல்கலையில் ‘தமிழரின் எதிர்காலம்: ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமுதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நானும் எனது சக நண்பர்களும் இது குறித்து நீண்ட ஆய்வுகளை செய்திருக்கிறோம். தொடர்ந்து எச்சரித்தும் வருகிறோம்.

ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்த கருவள வீதம் 2.1 இலும் அதிகமாக இருக்க வேண்டும்.

அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவள வீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.

ஆனால் இன அழிப்பு அரசு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.

அதற்கு இந்த பட்டியலை வெளியிடாமல் தடுத்து வைத்திருப்பது முதன்மை காரணமாகும்.

அரசியல் தீர்வுகள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்பாக எமது இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச வேண்டிய விடயம் இதுதான்.

-பரணி கிருஸ்ணரஜனி

-http://www.tamilwin.com

TAGS: