இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள்.
அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம் வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை அத்துடன் விமானப்படையையும் அடைந்து சிங்களப்படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தனர். தமிழீழம் என்ற தனிநாடு மலரும் தருவாயில் பக்கத்து வல்லரசு, உலக வல்லரசு, உலக நாடுகள் இலங்கையில் இரண்டு ஆதிக்க சக்திகள் இருப்பதால், அதாவது தமிழீழ அரசு மற்றும் சிங்கள அரசு என இரண்டு இருப்பதால் தங்களின் ஆதிக்க நலனைக்கருதி தமிழீழ அரசை அழிக்க திட்டம் தீட்டி தமிழீழ நிழல் அரசை உலக நாடுகளின் துணையுடனும் இந்திய நேரடிக்கள முன்னெடுப்புடனும் சிங்கள கூட்டுடன் அழித்தன. தமிழர்களின் பலத்தை முள்ளிவாக்காலில் துடைத்து அழித்தது.
ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழர் போராட்டம் முடியவில்லை என்பதை தமிழர்கள் இன்றுவரை நடத்தும் ஜனநாயக வழி போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் ஜனநாயக வழிப்போராட்டம் உலக அரங்கில் உத்வேகம் அடைந்து வீறுநடை போடுகின்றது.
ஈழத்தில் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழ மக்களுக்கு தங்களின் ஜனநாயக அமைப்பாக தேசிய தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட அமைப்பு என்ற ஒரு காரணத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தங்களின் ஜனநாயக விடுதலை அமைப்பாக கருதுகின்றனர்.
இதனால் கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மௌனத்தின் பின் தமிழ் மக்களின் விடுதலைக் குரலாக மாறியது. தமிழ் மக்களின் விடுதலைக் குரலாகவும் ஜனநாயக அமைப்பாகவும் இருக்கும் கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்திய வல்லரசு முயல்கின்றது. அதாவது தனது கைப்பொம்மை போல் பாவித்து தான் போடும் தாளத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் என்பதே உண்மை. அந்த வெற்றி கூட்டமைப்பின் சில பழுத்த அரசியல் வாதிகளின் அனுசரணையோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகளை தங்களின் ஆதிக்க நலன்களுக்கு பயன்படுத்த முயன்று தோற்றுப்போன இந்தியா விடுதலைப்புலிகளின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் சிங்கள பேரினவாத அரசுக்கு தனது ஆதரவை வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது.
தற்பொழுது கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தடைக்கல்லாக இருப்பதாலும் மற்றும் அவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக பிரநிதித்துவப்படுத்துவதோடுஅவர்கள் புலிகளின் கொள்கையுடன் தற்பொழுதும்இருக்கிறார்கள் என்பதாலும் அவர்களை கூட்டமைப்பில் இருந்து அகற்ற முடிவெடுத்தது. இதில் முதல் பலியானவர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன் இவர்களுடன் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சிறந்த தமிழ் தேசியவாதிகள்.
“இவர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்கள், விடுதலைப்புலிகளின் கொள்கையை கடைப்பிடிப்பார்கள், இவர்களை கூட்டமைப்பில் இருந்து நீக்குங்கள்” என்ற இந்தியாவின் கட்டளைக்கு அமைய பத்மினி சிதம்பரநாதன்,செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்களை கூட்டமைப்பின் தலைமை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதற்கு கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தாமல் தவிர்த்தது. இதனால் இவர்களுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். அதாவது இவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
இந்தியாவின் கட்டளைக்கு அமைய கூட்டமைப்பின் தலைமை தமிழ்தேசிய பற்றுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு ஏற்றாற்போல் நடக்கும் அல்லது புலிகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கூட்டமைப்பில் இருந்து சாதூரியமாக விலக்கியது.
அதாவது விடுதலைப்புலிகள், தமிழீழம் போன்ற அடையாளங்களை தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்க உலக அரங்கில் நடக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கைகள். அதேபோல் விடுதலைப்புலிகளின் வவுனியா மற்றும் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றி இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த எழிலன்(சசிதரன்) அவர்களின் மனைவி அனந்தி சசிதரன் அவர்களின் இடைநிறுத்தமும் இதனையே தெளிவாக்குகின்றது.
கூட்டமைப்பின் வாக்கு பலத்தை அதிகரிக்க வடமாகாண சபைதேர்தலில் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்வதற்கு அனந்தி சசிதரனை பாவித்த கூட்டமைப்பு தற்பொழுது அவருடைய வளர்ச்சி கண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை புறந்தள்ள வேண்டும் என்ற இந்திய அறிவுறுத்தலுக்கு அமைய தற்பொழுதே நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூட்டமைப்பினர் வரும் தேர்தலில் முன்னர் விட்ட தவறுகளை சரி செய்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் இணைத்து, அவர்களையும் வரும் பொதுதேர்தலில் கூட்டமைப்பின் சர்ப்பாக நிறுத்துவதன் மூலம் கூட்டமைப்பானது தமிழர் தேசத்தில் அதிகளவு பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிசமைத்து கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றன இணைவதோடு, அனந்தி சசிதரன் அவர்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி பொதுத்தேர்தலை சந்தித்தால், 3 தொடக்கம் 4மேலதிக உறுப்பினர்கள் தெரிவை தமிழர் கூட்டமைப்பு பெற்றுகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். வல்லரசுகளை மக்கள் பலத்தின் மூலம் தமிழர்களாகிய எங்களின் கொள்கைக்கு வரவைப்போம்.
தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கைகளோடு தமிழர்கள் யாவரும் இணைந்து செயற்படுங்கள். ஒற்றுமையே விடுதலையைப் பெற்றுத்தரும்.
-சரவணை மைந்தன்