13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமலாக்கம் என்பது ஏமாற்று வேலை: பழ. நெடுமாறன்

nedumaran13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுவது ஏமாற்று வேலை என, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்னையில், அந்நாட்டின் 13-ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது முக்கியமான நோக்கம். ஆனால், முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனா மிக தந்திரமாக ராஜீவ்காந்தியை ஏமாற்றி சிங்களர்களுக்கு 8 மாகாணங்களையும், தமிழர்களுக்கு ஒரு மாகாணத்தையும் அமைத்தார். அதை ராஜீவ் காந்தி கண்டிக்கத் தவறி விட்டார்.

ராஜபட்ச அதிபராக பொறுப்பேற்ற உடன், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் செய்து வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ரத்து செய்து சட்டமாக்கி விட்டார். இந்தச் சூழலில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போவதாக கூறுவது ஏமாற்று வேலை.

உண்மையில் அந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதாக இருந்தால், முதலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களை சட்டப்பூர்வமாக மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழர்களுக்கு நிலம், குடியுரிமை முழுமையாக வழங்கப்பட வேண்டும். அப்பகுதியில் சிங்கள போலீஸாரை அகற்றிவிட்டு தமிழர்களை போலீஸாராக நியமிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவற்றில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தமிழர்களை குடியமர்த்த வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை ஓரளவு நம்பலாம்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தையில், தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. தமிழர்களுக்கு உரிமைகள் ஏதும் வழங்கப்படாத நிலையில், அகதிகளை இலங்கை அனுப்புவதற்கு ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளோம். வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் ஐ.நா.சபையை அணுகி இனப்படுகொலை, மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு நடவடிக்கை எடுத்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளை முடக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தமிழர்களை திரும்ப அழைக்கும் தந்திரத்தில் இலங்கை அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு இந்திய அரசும் துணைபோகக் கூடாது. மீறி முயற்சி செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்.

-http://www.pathivu.com

TAGS: