இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடியளவு ஒத்துழைப்பை வழங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினை தீர்வுக்காக எடுத்த அதிக முயற்சி தொடர்பிலேயே சுமந்திரன் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண ஏற்கனவே நல்லிணக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
திம்பு யோசனை, மங்கள முனசிங்கவின் யோசனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் யோசனை போன்றவை அதில் அடங்குகின்றன.
இந்தநிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கண்டுபிடிப்பு அவசியம் இல்லை என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்தக்கருத்துக்கு தாம் முழுமையாக உடன்படுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com