வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
இலங்கையின் வடக்கே வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக புதிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண அமைச்சர்கள் சகிதம் புதிய மீள்குடியேற்ற அமைச்சரை சனியன்று கொழும்பில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் போதே இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டிருக்கின்றது.
வலிகாமம் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் பலாலி துறைமுகத்துக்கும் இராணுவத் தேவைக்கும் போக எஞ்சியுள்ள பிரதேசத்தை, காணி உரிமையாளர்களிடம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
‘இந்தப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் பல இடங்களிலும் 34 முகாம்களில் பெரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள்… ஆடம்பர மாளிகைகள், பல்வேறு விளையாட்டுக்களுக்கான திடல்களை அமைக்கின்றார்கள்’ என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்துள்ள மக்களை சொந்தக் காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது.
அதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்துள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு மட்டுமல்லாமல் வடக்கிலும், கிழக்கிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் எனைய காணிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களில் 2000த்துக்கும் மேற்பட்டவர்கள், தமது காணிகள் தமக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானத்தளம் என்பவற்றை பொதுமக்களின் பாவனைக்காக விஸ்தரிக்கும் நோக்கத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவே சுமார் 6500 ஏக்கர் காணி எடுக்கப்பட்டிருப்பதாக முன்னைய அரசாங்கம் கூறிவந்தது. -BBC