ஜெனீவாவில் இருந்து மேற்கொள்ளப்படும், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த மாத இறுதிக்குள்ளாக இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் தான், அடுத்த கட்டமாக மார்ச் 25ம் திகதி அதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கையில் நடந்தேறியுள்ள ஆட்சி மாற்றங்கள் குறித்த கவலைகள் ஏதுமின்றி, இதற்கான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவே தெரியவருகிறது.
அதேவேளை, இந்த விசாரணை அறிக்கையும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் அடுத்த கூட்டத் தொடரும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு சவால்கள் மிக்க விடயமாகவே இருக்கப் போகின்றன.
ஏனென்றால், முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜெனீவா தீர்மானங்கள் மற்றும் ஐ.நா. விசாரணை போன்ற விடயங்களில், கடைப்பிடித்த முரண்போக்கு அணுகுமுறையை இப்போதைய அரசாங்கத்தினால் கடைப்பிடிக்க முடியாது.
அதேவேளை, முன்னைய அரசாங்கம் அத்தகைய அணுகுமுறையின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தனது இமேஜை உயர்த்திக் கொண்டது.
எனவே, முன்னைய அரசாங்கத்துக்கு பலம் சேர்க்கும் வகையில், தமது நகர்வு அமைந்துவிடக்கூடாது என்பதுவும், இப்போதைய அரசாங்கத்தின் கரிசனைக்குரிய விவகாரமாகவும் இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கம் சிங்கள மக்களை விரோதிக்கும் எந்தக்காரியத்திலும் ஈடுபடாது.
எனவே, ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரத்தில், விட்டுக்கொடுக்கவும் முடியாத அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்டு பிடிக்கவும் முடியாத ஒரு சூழ்நிலை புதிய அரசாங்கத்துக்கு உருவாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 100 நாள் செயற்றிட்டத்தை முன்வைத்தே தற்போது ஆட்சியை நடத்தினாலும், அவ்வப்போது அதற்கு வெளியே செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
ஜெனீவா விவகாரமும் அவ்வாறானதொன்று தான். ஏனென்றால், அந்த 100 நாட்களுக்குள் தான் ஜெனீவாவில் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவாதம் நடக்கப் போகிறது. அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கப்படப் போகிறது.
எனவே, புதிய அரசாங்கம் ஜெனீவாவை எவ்வாறு அணுகுவது-, ஐ.நா. விசாரணையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தயார்படுத்தல்களில் எப்படியும் ஈடுபட்டேயாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்கப் போகும் விசாரணை அறிக்கை, குற்றங்கள் நடந்ததா இல்லையா என்பதைத் தான் கூறுமே தவிர, அது எவரையும் குற்றவியல் நீதிமன்றத்து க்கு கொண்டு செல்வதற்கான அதிகாரம் பெற்றதாக இருக்காது என்றும், அந்த அறிக்கை வெளியானதும் அதுகுறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், குற்றங்கள் நிகழவில்லை என்று ஐ.நா. விசாரணை அறிக்கை வரப் போவதில்லை. எனவே, அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
அதனால்தான், கடந்தவாரம் புதுடில்லி சென்றிருந்தபோது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவின் உதவியை கோரியிருந்தார்.
அதுபற்றிய தகவல்களை இரு நாடுகளும் பகிரங்கப்படுத்தாத போதிலும், இந் திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நடந்த மூன்று மணிநேரப் பேச்சில் அதுவும் முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது.
புதுடில்லிப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மங்கள சமரவீர, ஐ.நா.வின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத் தும் என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, தேர்தல் பிரசாரங்களின் போதும் கூட, சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், ஆனால் உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய, உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என்றும் தான் தற்போதைய அரசாங்கம் கூறியிருந்தது.
எனவே, 100 நாள் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி இல்லாது போனாலும் சரி, போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்தும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் வெளியாகப் போகும் அறி க்கை மற்றும் அதன் மீதான ஐ.நா.வின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முன்னதாகவே இதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
இலங்கைக்கு எதிராக, 2012ஆம் ஆண்டு தீர்மானத்தைக் கொண்டு வர முன்னரும் சரி, முதல் இரண்டு தீர்மானங்களின் போதும் சரி, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நம்பகமான உள்நாட்டு விசாரணையையே வலியுறுத்தின.
ஆனால், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, சர்வதேச சமூகத்தின் நம்பகத்தைப் பெறக்கூடிய விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. அதனால் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா.வின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இப்போது கூட, நம்பகமான விசாரணைகளை ஐ.நா.வின் உதவியுடன் ஆரம்பிப்பதன் மூலம், ஜெனீவா நகர்வுகளுக்கு தற்காலிக தடை ஒன்றைப் போடலாம் என்று இப்போதைய அரசாங்கம் கருதுகிறது.
இந்தியாவும் கூட இதற்கு நிச்சயம் ஆதரவளிக்கும். ஏனென்றால் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குத்தான் இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததே தவிர, ஒரு போதும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அதைவிட, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
அதனால் தான், ஜெனீவாவில் இலங்கை க்கு ஆதரவு வழங்கக் கோரிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு, உடனடியாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்குமாறு இந்தியத் தரப்பில் ஆலோ சனை கூறப்பட்டுள்ளதாகத் தகவல்.
அவ்வாறு நம்பகமான ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அடுத்த கட்டம் குறித்து சற்று நிதானமாகவே முடிவெடுக்கும்.
ஏனென்றால், அவர்கள் தரப்பிலும் பலவீ னங்கள் உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வைத்து இலங்கைக்கு எதிராக உடனடியாக எந்த நடவடிக்கையை யும் மேற்கொள்ள முடியாது.
அதற்குப் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை. பாதுகாப்புச் சபையிலோ, சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ அதிகாரங்களால் அதனைத் தடுத்து விடும்.
எனவே, இலங்கையுடன் இணக்கமானதொரு நிலையை ஏற்படுத்தக் கூடிய நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பது அமெரிக்காவுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆட்சிமாற்றத்துக்கு அமெரிக்கா உந்துதல் கொடுத்தமைக்கு இதுவும் ஒரு காரணம். இது இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குச் சாதகமான விடயம்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், உள்நாட்டு விசாரணை என்ற கவசத்தை இப்போதைக்குப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இலங்கை அரசு.
இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காக கடந்த வாரம் வாஷிங்டன், நியூயோர்க், ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை, ஐ.நா.வின் உதவியுடன் நம்பகமானதொரு விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர், புதிய அரசாங்கத்துக்கு இன்னும் சில சிக்கல்களும் இருக்கின்றன.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட காணமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்று உள்ளது.
போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றினால் முன்னெடுக்கப்படும் விசா ரணைகள் குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.
புதிய விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டும் போதாது, சிங்கள மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, இது கல்லில் நார் உரிக்கும் காரியம் தான். என்றாலும் அதைச் செய்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு உள்ளது.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக, அதன் போக்கை மதிப்பிடுவதற்காக, ஐ.நா.வும் அமெரிக்காவும் கூட குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்க முன்வரலாம்.
ஏனென்றால், அதைவிட வேறு தெரிவு அவர்களுக்கும் இல்லை.
ஆனால், அத்தகைய தீர்மானம் தமிழர் தரப்புக்கு ஏமாற்றமளிப்பதாகவே அமையும். தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்ததன் விளைவே இது என்று, தீவிர கருத்துடையோரால், குற்றம் சாட்டப்படும் நிலையையும் இது ஏற்படுத்தக் கூடும்.
– என்.கண்ணன்
-http://www.tamilwin.com