சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணை தொடர வேண்டும்!

unhcr_sl_001அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.

இதேவேளை சிங்களத் தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பை பேணுவோரும், பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோரும், சிங்களத் தலைவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தோரும், தனிப்பட்ட ரீதியில் தமது உறவிற்காக அறிக்கை வெளியிடுவோரும் அவற்றை தொடரலாம்.

சகலருடைய உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் இவர்கள் வழியில், சிலருடனான தனிப்பட்ட நட்பிற்காக, உண்மைகளை மறைத்து, மக்களை விற்று உறவை வளர்க்க தயாராகவில்லை.

சுருக்கமாக கூறுவதனால், நாம் ஒருபொழுதும் கானல் நீரை கண்டு ஏமாறுபவர்கள் அல்ல. எமக்கு எந்த இழப்பு வந்தாலும், மக்களுக்கு, விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, மற்றைய சர்வதேச மனித உரிமையாளர்களுடன் இணைந்து, எமது வேலை திட்டங்களை தொருவோம்.

ஒரு சர்வதேச உடன்படிக்கை என்பது ஒரு நாட்டின் சார்பாக அந்நாட்டின் தலைவரினால் அல்லது தலைவரின் பிரதிநிதிகளினால் கையெழுத்திடப்படுவதே உலக வழக்கம். இதே போலவே ஒர் நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கையும். ஆகையால் ஓர் நாட்டில் அரசாங்கம் மாறியதற்காகவோ அல்லது வேறு கட்சியோ அல்லது கட்சிகள் புதிய அரசாங்கத்தை அமைத்ததற்காகவோ அந்நாடு மீதான சர்வதேச நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது நியதி அல்ல.

கானல் நீர்

நாங்கள் மிகவும் தூரம், தனித்து பல காரடு முரடான பாதைகளை கடந்து பயணித்துள்ளோம். இலங்கை தீவில் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள, மிகவும் மோசமான மனித உரிமை மனிதாபிமான மீறல்கள், போர்க்குற்றம் போன்றவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வரை எமது வேலை திட்டங்களுக்கு முழுக்கு போடமுடியாது.

பல தசாப்தங்களாக கடுமையான இடைவெளியற்ற முயற்சிகளின் பலனாக, இன்று சர்வதேச சமூதாயம், இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியான நியாயம் கிடைப்பதற்கு தமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இக்கட்டத்தில் நாம் ‘கானல் நீரை’ கண்டு ஏமாற முடியாது.

பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், தமிழ் இனத்திற்கு ஓர் அந்தஸ்துடனான அரசியல் தீர்வும் கிடைக்கும் வரை, எமது சர்வதேச ரீதியான வேலைதிட்டங்களை எதிர்வரும் இடையூறுகள் நாசகார வேலைகளை தாண்டி தொடர்ந்து செய்வோம்.

மூன்று பிரேரணைகள்

2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் – சர்வதேச மனித உரிமை, மனிதாபிமான அமைப்புக்கள், சில தமிழ் அமைப்புக்கள், பல்லின ரீதியான தனிப்பட்டவர்களின் முயற்சி, பல ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் முயற்சி போன்றவற்றின் பலனாக, மூன்று கண்டனப் பிரேரணைகள் சிறிலங்கா மீது தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் மீண்டும் நாம் சிங்களத் தலைவர்களினால் ஏமாற்றப்பட்டு, பின்னோக்குவோமானால், உலகில் எம்மை போன்ற ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது. ஆகையால் தற்போதைய ஆட்சியாளர்களிடம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் உள்ள நிலையில், சாட்டு போக்கு சொல்லாது, காலம் தாழ்த்தாது வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு உரியவற்றை உரிய நேரத்தில் செய்வதற்கு முன் வரவேண்டும். ஆனால் இதற்கான சைகைகள் எதுவும் தென்படவில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை சபை அமர்வில், இவ் அரசு, முன்னைய அரசு போல், கால அவகாசம் கேட்பதற்கு தயாராகின்றனர்.

இதில் பலர் முன்னைய அரசிற்காக சர்வதேச ரீதியாக உழைத்தவர்கள். ஆகையால் இவர்கள் ‘பழைய குருடி கதவை திறவடி’ என்பது போல் உள்நாட்டு விசாரணையை வற்புறுத்துவதை கண்டு நாம் திகைக்கவில்லை.

1956; ஆண்டு முதல் பதவிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், எவ்வளவு தூரம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பதை நாம் பல தடவை பட்டியலிட்டுள்ளோம்.

சர்வதேச அழுத்தங்கள் கண்டதும், உடனடியாக ஓர் ஆணைக்குழவை நியமிப்பதும், இவ் ஆணைக்குழு வெளியிடும் அறிக்கைகளுக்கு எந்த நடடிவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பல சந்தர்பங்களில் அறிக்கையே வெளிவருவதில்லை.

பெரும்பாலன கட்டங்களில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு ஓர் ஒழுங்கான விசாரணையோ அல்லது ஆணைக்குழுவோ நியமிக்கப்தபட்டதில்லை. தமிழர்கள் எப்படியும் கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கபடலாம், காணாமல் போகலாம், படுகொலை செய்யப்படலாம் ஆனால் இவற்றிற்கு நீதி நியாயம் கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதே சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் சிந்தனையும் போக்கும். இதுதான் யதார்த்தம். இதனது குற்றவாளிகள் மறுபட்ட அரசினால் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய அரசையோ, புதிய ஜனாதிபதியையோ நம்பி எமது வேலை திட்டங்களை தற்காலிகமாக தன்னும் கைவிடுவதற்கு தயாராகவில்லை.

நியமிக்கப்பட்ட சில ஆணைக்குழுக்கள்

நவம்பர் 1977 சன்சோனிக் ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்து நடவடிக்கை இல்லை.
1981-84 இனரீதியான தாக்குதல்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்படவில்லை.
மே 1991 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் மீதான தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்டது. நடவடிக்கை இல்லை
யூன் 1991 கொக்கட்டிச்சோலை ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டது நடவடிக்கை இல்லை
1991-93 காணாமல் போனோர் பற்றிய ஜனதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்படவில்லை
செப்டம்பர் 1993 ஜனதிபதி டி.பி.விஜயதுங்கா ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்படவில்லை
நவம்பர் 1994 காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழு அறிக்கை 1997ல் வெளியிடப்பட்டது நடவடிக்கை இல்லை
டிசம்பர் 1995 பற்றலண்ட ஆணைக்குழு நடவடிக்கை இல்லை
ஏப்ரல் 1998  நாடுபூராகவும் காணாமல் போனோர் ஆணைக்குழு அறிக்கை 2001ல் வெளியிடப்பட்டது நடவடிக்கை இல்லை
யூலை 2001 ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை 2002ல் வெளியிடப்பட்டது நடவடிக்கை இல்லை
மார்ச் 2001 பிந்துனேவா படுகொலைக்கான ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்படவில்லை
நவம்பர் 2006 சர்வதேச சுயதீன நிபுணர்குழு அறிக்கை வெளியிடப்படவில்லை

சர்வதேச விசாரணை

ஊடகங்களின் வெளியான செய்திகள் செவ்விகளின் பிரகாரம், சர்வதேச விசாரணையை பொறுத்த வரையில், இன்றைய ஜனதிபதி, அரசாங்கத்திற்கும், முன்னைய ஜனதிபதிக்கும் இடையில் நாம் எந்த பாரிய வித்தியாசத்தை காண முடியாது. இவற்றிற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக தமிழர்களுக்கு நடைபெற்றவற்றிற்கு நீதி கிடைக்கப்படாது என்பதில் இவர்களிற்குள் உள்ள ஒற்றுமை. இராண்டவதாக தமிழ் மக்களாகிய நாம் மிகவும் பலம் இழந்து ஐக்கியமின்றி நாட்டிலும் புலத்திலும் காணப்படுவது. மூன்றவதாக எம்மில் சிலர் எமது இனத்தின் சமூக, பொருளதார, அரசியல் பிரச்சனைகளை தங்கள் சுயதேவைகளுக்கு மட்டும் பாவிப்பது. தமக்கு திருப்தி தரும் விடயங்கள் எமது இனமே திருப்திபட்டு விட்டதாக கணித்து கொள்வது.

இன்றைய ஜனாதிபதியும் அரசாங்கமும், தமது ஆட்சி மாற்றத்தில் தம்மால் கணிக்கப்பட்டவற்றை மட்டுமே ஜனநாயமாக கொள்கிறார்கள். இவர்கள் கூறும் ஜனநாயகத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தேர்தல் காலத்திலோ அல்லது இன்றோ உள்ளடக்கப்படவில்லை.

காரணம் இவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள சிங்கள தீவிரவாத கட்சிகளை திருப்திபடுத்துவதையே இவர்கள் முக்கிய கடமையாக கொண்டுள்ளனர். இவர்களை திருப்திப்படுத்தாத கட்டத்தில், எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் இவ் அரசு படுதோல்வியை தழுவிக்கொள்வது மட்டுமல்லாது, முன்னை ஜனாதிபதி அல்லது அவர்களது சகாக்கள் ஆட்சியை கைப்பற்றக் கூடிய நிலையே அங்கு காணப்படும்.

இதன் காரணமாக, 100 நாட்களுக்குள் நடைபெறுமென கூறப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் இப்பொழுது பலருக்கு எழுந்துள்ளது.

ஜனாதிபதி போர்க்குற்றவாளியா?

இன்றைய ஜனாதிபதி, தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கு கொடுத்த செவ்வியில், கூறிய முக்கிய விடயமான, “போர் முடியுறும் காலத்தில் தான் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகவும், அவ்வேளையிலேயே தமிழீழ விடுதலை புலிகளின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாக பெருமித்துடன் கூறியவை,” இவரும் ஓர் போர்க்குற்றவாளியென்பது உறுதியாகிறதா?

அப்படியானால், முன்னைய ஜனாதிபதிக்கும், இன்றைய ஜனாதிபதிக்குமிடையில், விசேடமாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான போர்க்குற்ற விசாரணையில் நாம் எந்த மாறுதலையும் காண முடியாது. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மற்றும் சம்பவங்களை பற்றி பல உண்மைச் சாட்சியங்கள் நன்கு தெரிந்தவர்கள் தற்போதைய அரசில் உள்ளார்கள்.

உதாரணத்திற்கு வெள்ளைக் கொடி விவகாரம் பற்றிய பல உண்மைகளை சில வருடங்களுக்கு முன்னர் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கூறியிருந்தார். இன்று, இதே நபர்கள் சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணையை எப்படி மழுங்கடிக்க வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள்.

ஜீரணிக்க முடியாது

போரின் முடிவில் நடந்தவற்றை மிக நன்றாக தெரிந்து கொண்ட தற்போதைய அரசு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ளாது, உள்நாட்டில் முன்னைய காலத்தில் நடைபெற்ற விசாரணைகள் போல் விசாரணை செய்ய முன்வருவது, யாராலும் ஜீரணிக்க முடியாத விடயமாகும்.

இவர்கள் கூறும் நல்லிணக் குழுவின் அறிக்கை என்பதை பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அன்றே ஏற்க மறுத்து விட்டார்கள். இவ்வறிக்கை சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்கா முன்னைய ஆட்சியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டாது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஐ.நா.வை பொறுத்தவரையில், உள்நாட்டு விசாரணைக்கான கால அவகாசங்கள் யாவும் முடிவடைந்து விட்டது. இன்று சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணைக்காக ஐ.நா.வின் அமைப்புக்கள் பல கோடி டொலர்களை செலவு செய்து தமது வேலை திட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.

ஆகையால் சிறிலங்காவின் மறுபட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உள்நாட்டு விசாரணை என்ற பூஞ்சாண்டி காட்டும் வேலைகளுக்கு சர்வதேசமும், ஐ. நா.வும் அகப்பட விடாது பார்ப்பது எமது கடமை. இவ் நல்லிணக்க அறிக்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் முன்னொழியப்படவில்லை.

வெளிநாட்டு அமைச்சர்

தற்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, முன்பு வெளிநாட்டமைச்சராக இருந்த வேளைகளில், தமிழ் மக்களுக்கு செய்த நாசகார வேலை என்பது ஆயிரம். இவரை பற்றி எழுதுவதனால் பல பக்கங்கள் எழுதலாம்.

மிகச் சுருக்கமாக, தமிழ் மக்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை, சர்வதேசத்திற்கு பயங்கரவாதமாக முன்வைத்து பல வெற்றிகள் கண்டவர். இவரை வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச நீங்கிய வேளையில், இவர் ராஜபக்சவிற்கு எழுதிய இதற்கு ஆதரம். பின்வருமாறு கடிதத்தில் கூறுகிறார். “வெளிநாடுகள் தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்யும் வரை, ஆட்கடத்தல், கைது, படுகொலை போன்றவற்றை நிறுத்துமாறு பாதுகாப்பு செயலாளரை வேண்டியிருந்தேன்” என எழுதியுள்ளார்.

இவர் என்ன கூறுகிறார் எனில், வெளிநாடுகள் தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்த பின்னர், ஆட்கடத்தல், கைது, படுகொலை போன்றவற்றை தொடருங்களென, பாதுகாப்பு செயலாளரை அவ்வேளையில் வேண்டியுள்ளார். இது இவரது அடிப்படை சிந்தனைகளின் வெளிப்பாடே என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகண சபையின் ஆளுநர்

தற்பொழுது வடமாகண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஜீ பள்ளியக்காரா, முன்பு ஜெனிவா சிறிலங்கா தூதுவரலாயத்தின் செயலாளராகவும், பின்னர் தூதுவராக கடமையாற்றிய காலத்திலிருந்து இவரது செயற்பாடுகளை நன்கு அறிவேன். இதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு இவரை பற்றிய சில தகவல்களை எழுதியிருந்தேன்.

வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவை போன்று, நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஜீ பள்ளியக்காரா தமிழ் மக்களுக்கு செய்த நாசகார வேலை பற்றி எழுதுவதானால், பல பக்கங்கள் எழுத முடியும். மிகச் சுருக்கமாக கூறுவதனால், ஐக்கிய நாடுகள் சபையில் எனது இருபத்தைந்து வருடகால செயற்பாடுகளில், ஜீ பள்ளியக்காரா போன்று மிக இனத்துவேசம் கொண்ட சிறிலங்காவின் தூதுவரை நான் கண்டதே கிடையாது.

முன்பு எழுதாத ஓர் முக்கிய விடயத்தை இங்கு தருகிறேன். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் படுகொலையை பற்றி, பிரான்ஸின் சுதந்திரமான மனித உரிமை நிபுணரான, திரு லூயூ யுவனே அவர்கள், ஐ.நா.மனித உரிமை உப ஆணைக்குழுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

திரு லூயூ யுவனே இக்கேள்வியை எழுப்பியதற்காக, இவ் பள்ளியக்காரா யுவனே போட்டியிட்ட ஐ.நா. மனித ஆணைக்குழுவின் தேர்தல் ஒன்றில், லூயூ யுவனேயிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.

இப்படியான இனத்துவேசம் கொண்ட ஜீ பள்ளியக்காராவே இன்று வடமாகண சபையின் ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களின் தலைவிதி!

இவர்கள் மட்டுமல்லாது, இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் வேறு சிலரும் இப்படியானர்வர்களே. இவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில், இவ் அரசும் எவற்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை நாம் ஊகித்து கொள்ள முடிகிறது.

-ச. வி. கிருபாகரன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: