ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளது.
இலங்கையில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஐ.நா உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
இந்நிலையில் வரும் மார்ச் மாத அமர்விற்கு முன்னதாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தாங்கள் முயல்வதாகவும் அதற்கு ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நம்பகமான மூன்றாம் தரப்புக்களின் ஆதாரங்களை விசாரணைக் குழு ஏற்கனவே பதிவு செய்து முடித்திருக்கும். எனினும், இலங்கைத் தீவில் உள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தமது வாக்குமூலங்களைக் கொடுக்கவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே இந்த வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ஐ.நா விசாரணைக்குழுவின் இலங்கை;கான பயணம் மேலும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும்
பாதிக்கப்பட்டவர்களின் விசாரணை மட்டும் அன்றி, குற்றவாளிகளும் விசாரிக்கப்படவேண்டியது அவசியம். இந்த விசாரணை, நேரடியாகக் குற்றம் புரிந்தவர்களை நிர்ணயிக்க மட்டும் அல்லாமல், கட்டளைப் பொறுப்பின் சங்கிலித் தொடரில் எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பைக் கொண்டிருந்தார்கள் என்பதை தீர்மானிக்கவுமேயாகும்.
தடயவியல் ஆதாரங்களை பெற சம்பவம் நடந்த இடங்களுக்கு செல்வது இன்றியமையாதது என தெரிவிக்கப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடித்தில் இலங்கை விவகாரம் தொடர்பிலான அறிக்கையினை சபையில் சமர்பிப்பதற்கு முன்னர் ஆணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைப்பீர்கள் என நம்பிக்கை கொள்ளவதாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com