தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சாற்றின் பேரில், நெதர்லாந்தில் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஹேக் நீதிமன்றம், விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்; “ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, அனைத்துலக ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன் மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாற்றுகளை சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம் சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இச்சிறை தண்டனை பற்றி குறிப்பிட்ட நீதிபதி, “நெதர்லாந்து சட்டப்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்து முடியாது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை இவர்களுக்கு பொருந்தும் என்பதால், விடுதலைப் புலிகளுக்காக அவர்கள் பணம் சேர்த்தது சட்ட விரோதமாகிறது” என்றார்.