தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்த வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஞாயிறன்று அவர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.
அப்போது, சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக விசாரணைகளின்றியும் வழக்கு தாக்கல் செய்யப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேட்டுக்கொண்டபோதே ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக மன்னார் ஆயர் தெரிவித்தார்.
சில கைதிகள் 19வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதனால், அவர்களுடைய குடும்பங்கள் பெரும் கஷ்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருக்கின்றன.
அன்றைய காலச் சூழல் மற்றும் வற்புறுத்தல் காரணமாகவும் இந்தக் கைதிகள் விடுதலைப்புலிகளுக்காகச் செயற்பட நேரிட்டிருந்தது.
இதனை மனதிற் கொண்டு, மனிதாபிமான ரீதியில் ஜேவிபியினர் இரண்டு தடவைகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவரும் இந்த வருட முடிவுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் அவர் திங்களன்று வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துள்ளார்.
புதிய அரசாங்கம் தமது நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு மனிதாபிமான ரீதியில் தங்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக மன்னார் ஆயர் தெரிவித்தார். -BBC
அவர்கள் விடுதலை ஆவார்கள் என நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம். வாழ்க! வளர்க!