வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால் காணாமல் போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தரக்கோரி மீண்டும் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் உருவாகி இருக்கும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை நோக்கி எதிர்வரும் இரண்டாம் திகதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு கிளிநொச்சி ஏ-9 வீதியிலுள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.இம்மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோருக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்தகாலங்களினில் காணாமல்போகச்செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளை இழந்து தேடி அலைந்து அவர்களின் பெற்றோர்களும் மனைவி மற்றும் உறவுகளும் எதுவித தீர்வும் கிட்டியிருக்கவில்லை.வெறும் கண்ணீருடன் ஏக்கத்துடன் இன்றும் வாழும் நிலையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமும் அந்த ஆட்சியாளர்களின் நூறு நாள் வேலைதிட்டமும் தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருமென ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கின்றது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சகல மாகாண சபை மற்றும் நகர பிரதேசசபை உறுப்பினர்கள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளவேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் சமுகத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் புத்திஜீவிகள் பொது சன அபிமானமுள்ள சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்களென திரண்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் திரண்டு குரல் கொடுக்கவேண்டுமெனவும் கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன உறவுகளின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் நடைபெறும் எனவும் காணாமல் போன உறவுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. மாவட்டம் தோறும் இதற்கு ஒரு தீர்வு எட்டும்வரை போராட்டம் நடத்தப்படுமெனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
-http://www.pathivu.com