புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இரண்டு படுகொலைகள் கொக்கட்டிச்சோலையை வாட்டியிருந்தது.அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.படுகொலைகளை சர்வதேசத்துக்கு கொண்டுவந்தவர். அவரும் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலையினை சர்வதேசம் வரையில் பிரபல்யம் அடையச் செய்தவர் அமரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சர்வதேச மயப்படுத்தியது மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்தில் அதற்கான விசாரணை குழுவினையும் அமைத்த பெருமை ஜோசப் ஐயாவையே சாரும். அந்த பெருமைகளைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கூட இந்த மட்டக்களப்பிலே படுகொலை செய்யப்பட்டார்.
இங்கு நடைபெற்ற படுகொலைகளை சர்வதேசம் வரையில் கொண்டு சென்று நீதி கேட்ட இரண்டு தலைவர்கள் எமது மாவட்டத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது மட்டக்களப்பின் வரலாற்று உண்மையாக இருக்கின்றது.
காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் 1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்த மாதம் எட்டாம் திகதி வரை பல படுகொலைகளை செய்து கொண்டே இருந்தார்கள். சென்ற வருடம் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவுதினத்தினை இதே மண்டபத்தில் ஒழுங்குபடுத்தியிருந்தும் கூட அன்று இருந்த அராஜக அரசாங்கம் இந்த மண்டபத்தில் நடத்தவிடாது தடுத்து பொலிஸார் கதவுகளையெல்லாம் இழுத்து பூட்டிச்சென்றனர்.
அந்த நிலைமை இன்று இல்லை. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் தனது பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் இருந்த நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தியதன் காரணமாக தோல்வியடைந்துள்ளார். இது அவருக்கு கடவுள்கொடுத்த தண்டனையாகும்.
அதனால்தான் இந்த நாட்டில் நல்ல சமாதானம் இன்று ஏற்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் எமக்கு இருந்தாலும் இன்று உள்ள அரசாங்கம் அனைத்து மக்களையும் ஓரளவு சமனான நடத்தும் வாய்ப்பினை ஏற்படுத்திவருகின்றது.
இதுபோன்று நாங்கள் சென்று கொண்டிருப்போமானால் ஒரு நல்ல எதிர்காலத்தினை எதிர்நோக்கலாம். இந்த நாட்டில் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் அந்த சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுத்தது.
ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினம் கடந்த கால ஆட்சியிலே நசுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிறுபான்மையினம் ஒன்றுபட்டு இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியது.
இன்று எமது பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துகின்ற போது பல விடயங்களை தீர்க்ககூடிய நிலையிருக்கின்றது.நாங்கள் அவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களிடம் அடிபணிந்து நாங்கள் அமைச்சு பதவிகளைப்பெறவில்லை. அமைச்சு பதவி எங்களது கோரிக்கைகளை பெறுவதற்கு சிலவேளைகளில் தடையாக இருக்கலாம். அதனால்தான் நாங்கள் அமைச்சு பதவிகளை ஏற்கவில்லை.
அரசாங்கத்தின் அனைத்து விடயங்களுக்கும் கையை உயர்த்தும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை. பாதகமான விளைவுகளை தடுப்போம். சாதகமானவற்றுக்கு ஆதரவு வழங்குவோம்.
இன்று நல்ல சூழ்நிலையில் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது. அண்மையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்த போது அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
சிறையில் வாடும் எமது இளைஞர்கள்,தமது மக்களின் காணிகள் உட்பட பல பிரச்சினைகளை கருத்தில்கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.பறிபோன நிலங்களை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட குழுக்களை அமைக்கவுள்ளனர்.
ஆகவே புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டியிருக்கின்றது. இதனை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
-http://www.tamilwin.com