‘இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை’ – பிரித்தானிய பிரதமர்

david-cameron_2இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமெரன், பிரித்தனைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ஆகியோர் அங்கு தமது செய்திகளை அனுப்பியிருந்த நிலையில், அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் இதில் நேரடியாக கலந்துகொண்டார்கள்.

இங்கு செய்திகளை அனுப்பிய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அங்கு நேரடியாகக் கலந்துகொண்ட அனைவருமே இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன, சர்வதேச விசாரணை நடக்க வேண்டும் என்று மீண்டும் வலியுத்தினார்கள்.

அதேவேளை, இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்து வருகின்ற சில நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டினார்கள்.

‘இலங்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று பிரித்தானிய பிரதமர் அங்கு தனது செய்தியில் கூறியிருந்தார். -BBC

TAGS: