இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசு அளிக்கும் என்று அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்ததை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமையில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை, நிதித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், இலங்கையின் சார்பில் தில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் துணைத் தூதர் எம்ஆர்கே லெனகாலா தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து வெளியுறவுத் துறை இணைச் செயலரும் செய்தித் தொடர்பாளருமான சையது அக்பருதீன் “தினமணி’ நிருபரிடம் கூறியதாவது:
முதலாவது கூட்டம் என்பதால், இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்தனர்.
அகதிகளை விருப்பத்தின்பேரில் திருப்பி அனுப்பும்போது அவர்களுக்கு எத்தகைய வசதி, வாய்ப்புகள் இலங்கையில் உள்ளன என்பது குறித்து இந்தியா தரப்பில் கேட்கப்பட்டது. இரு தரப்பிலும் சில ஆவணங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதையடுத்து மீண்டும் இரு நாடுகளின் உயரதிகாரிகளும் கூடிப் பேசத் தீர்மானித்துள்ளனர். இதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்றார்.
நடந்தது என்ன?: இரு நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
“இலங்கைக்கு விருப்பத்தின்பேரில் திரும்பிச் செல்லும் அகதிகளுக்கு அவர்களின் பூர்விகப் பகுதியில் வீட்டுவசதி, வாழ்வாதாரத் திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்க ஐநா அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின்படி சில திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது.
இத்திட்டங்களைச் செயல்படுத்தும் நிதியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கியுள்ளது. அதேபோன்ற திட்டங்களை இலங்கை அகதிகளுக்காக இந்தியா உருவாக்குமா? என இலங்கை தரப்பில் கேட்கப்பட்டது.
இதேபோல, இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு அந்நாட்டு அரசு எத்தகைய வாழ்வாதார திட்டங்களை வைத்துள்ளது? அத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஏதேனும் அறிக்கை தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
2012-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை கொண்ட பட்டியலை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்தும் மீண்டும் இரு தரப்பிலும் விவாதித்த பிறகு தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு இக்குழுவினர் சென்று அங்கு வசிக்கும் அகதிகளிடம் தாயகம் திரும்புவது தொடர்பாக கருத்துகளைக் கேட்பதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது’ என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-http://www.dinamani.com