இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபவன் பதவி ஏற்றார்

siripavan_swron_cj_001இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபவன் (63) இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு அளித்ததால் கடந்த 2013-ம் ஆண்டு சொத்துக்கணக்கை சரியாக காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்சே தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தார்.

அவருக்கு மிகவும் நெருக்கமான மோகன் பெரிஸ் என்பவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜபக்சே நியமித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கண்ணியமாக தலைமை நீதிபதி பதவியை விட்டு விலகும்படி மோகன் பெரிஸ்-க்கு புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடிதம் எழுதி இருந்தார். மோகன் பெரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வக்கீல்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்ட ஷிரானி பண்டாரநாயக்கா கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து பதவி ஏற்றார். அவருக்கு ஏராளமான வக்கீல்களும், நீதிபதிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பதவியேற்ற ஒரேநாளில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஸ்ரீபவன் (63) இன்று அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஸ்ரீபவன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: