தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்

uk-slankaஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் கொழும்பு – 3 இலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்றை சுமார் 45 நிமிடங்கள் நிமிடங்கள் நடத்தினர்.

இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டிஷ் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது அரசின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், மேலும் முக்கிய இரண்டு விடயங்கள் குறித்து பிரிட்டிஷ் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளும், திருகோணமலை சம்பூர் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தனர் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.

மேற்படி இரு பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டால், தற்போதைய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வடக்கு மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கின்றது என்று பிரிட்டிஷ் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இவ்விரு பகுதிகளிலும் பாடசாலை, வைத்தியசாலை, கிணறு உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான பொது வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதன்போது, தன்னால் அளிக்கப்பட்ட விளக்கத்தையும், முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் ஆர்வத்துடன் செவிமடுத்த பிரிட்டிஷ் பிரதிநிதிகள், வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என உறுதியளித்தனர் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: