மூடி மறைக்கப்படும் தமிழினப் படுகொலை! நீதிகேட்டு அணிதிரள்வோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை

swiis_eelam_001அறுபது வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசின் கொடிய இனப்படுகொலைக்கு முகம்கொடுத்து, அதற்கெதிராக பல ஒப்பற்ற உயிர்த் தியாகங்கiளை விலையாகக் கொடுத்து போராடிவரும் அடக்கப்பட்ட மக்களாகிய நாம் இன்று அரசியல் ரீதியாக என்றுமில்லாதவாறு ஓர் அனர்த்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்து சென்ற சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது உறவுகளை மிகக் கொடூரமாக இனப்படுகொலை செய்த, தமிழீழத்தை வஞ்சகமாக ஆக்கிரமித்த இனவெறியன் ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அவர்களிடமிருந்த கடைசி ஆயுதமான சனநாயக வாக்குரிமையை பிரயோகித்தார்கள்.

அதன் அர்த்தம் மைத்திரிபாலவை எற்றுக்கொள்கிறோம் என்று பொருட்படாது.

இந்த உண்மை சர்வதேசத்திற்கு சரிவர மொழிபெயர்க்கப்படாமல், தமிழர்கள் சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றும், தமிழர் என்ற அடையாளத்தை கைவிட்டு இலங்கையர்கள் என்ற ஒற்றையாட்சி தத்துவத்துக்குள் தம்மை கலக்க தயாராகவுள்ளதாகவும் சர்வதேசத்திடம் சிறீலங்கா அரசு பொய்யுரைத்து வருகிறது.

ஆட்சி மாறினால் நிர்வாகங்களில் மாற்றங்கள் வருவது பொதுவான விடயம். அப்படி மாற்றப்பட்ட வடமாகாண ஆளுநர் விடயத்தை ஏதோ தனிநாடு கிடைத்துவிட்டது போலவும், தமிழர்களுக்கு உரிமைகள் எல்லாம் கிடைத்துவிட்டது போலவும் மிகைப்படுத்திக் கூறுவதன் மூலம் சர்வதேசத்தின் கண்களை மட்டுமல்ல எமது கண்களையும் நிலைப்பாடுகளையும் கூட தடுமாறவைக்கின்றது.

இவ் வலையில் எமது பல மூத்த தலைவர்களும், மக்களும் அகப்பட்டுக்கொண்டுள்ளமை ஒரு கவலைக்குரிய விடயம்.

அறுபது ஆண்டுகால அனுபவத்தை வைத்தே நாம் இன்றைய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும். அவ் அனுபவம் என்னவெனில் சிங்களப் பெருந்தேசிய பௌத்த இனவெறி அரசியலுக்கு முன் (அனைத்துச் சிங்களக் கட்சிகளும்) இராஜதந்திரம் என்ற பெயரில் மேற்கொள்ளும் தமிழர் தலைமைகளின் இணக்க அரசியல், தமிழர்களின் எதிர்காலத்தையே முற்றாக அழித்துவிடும் என்பதே ஆகும்.

100 நாள் வேலைத்திட்டத்துக்குள் தமிழருக்கு வரப்பிரசாதங்கள் வரும் என்று நம்பிக்கை வெளியிட்டோரை பார்த்து நாம் கேட்கும் கேள்விகள்:

1.வடகிழக்கிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறுமா?
2.ஆக்கிரமிக்கப்பட்ட, அபகரிக்கப்பட்ட காணிகள் (எமது தேசம்) மீண்டும் தமிழர்களுக்கு கிடைக்குமா?
3.தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா?
4.கடத்தப்பட்டு காணமற்போனோர் நிலை கண்டறியப்படுமா?
5.இனப்படுகொலைக்கு நீதி கிடைக்குமா?
6.தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ன?
7.எம்மை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளவார்களா?
8.இன்னமும் தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், சமூக கலாச்சார ரீதியாக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலை உத்திகள் நிறுத்தப்படுமா?

இவை எதனையுமே புதிய சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்றப்போவதில்லை. எனவே, அறுபது ஆண்டுகளிற்கு முன்பிருந்தே கேட்கும் இந்தக் கேள்விகளிற்கு விடை கிடைக்காத அவலநிலையில், எம்மை ஏமாற்றி வேரறுக்கவே இன்றும் சிங்கள அரசால் திட்டங்கள் தீட்டப்படுகிறன.

இந்தக் கையறுநிலையை ஊடறுத்து, நாம் அரசியல் மாற்றத்தை காண்பதற்கு களத்திலும் புலத்திலுமாக சனனாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஓரணியில் பலமாக நின்று முன்னெடுக்கவேண்டும். இலங்கையை மையப்படுத்தியுள்ள சர்வதேசத்தின் பார்வையை எமக்குச் சாதகமாக்கவேண்டும்.

தாயகத்தில் போராட்டங்கள் மெல்ல மெல்ல வலுப்பெறும் இக்காலகட்டத்தில் தேசிய விடுதலைக்கு பெரும்பணிகளை ஆற்றுவதில் பெயர்போன சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய இனம் எதிர்வரும் 16.03.2015 அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக நாடத்தப்படுகின்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டதில் அலைகடலாக பெருக்கெடுக்கவேண்டுமென உரிமையுடன் அழைக்கின்றோம்.

என சுவிஸ் ஈழத்தமிழரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: