ஐ.நா விசாரணை அறிக்கை விவகாரம்! கைவிரித்தார் பான் கீ மூன்!

ban kee moonஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கைவிரித்து விட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையைப் பிற்போடும்படி, சிறிலங்கா அரசாங்கம் கோரி வருகிறது.

நேற்று நியூயோர்க்கில் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடும் தமது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளியிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்த விருப்பத்தை வெளியிட்டது தொடர்பாக ஐ.நாவின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் எதுவும் கூறப்படவில்லை.

ஆனால், மூடப்பட்ட அறைக்குள் பான் கீ மூனுடன் நடத்திய சந்திப்பில், அறிக்கையைப் பிற்போடுவதன் அவசியத்தை மங்கள சமரவீர வலியுறுத்தியதாக, தம்மை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

ஆனால், இது தனது விவகாரம் அல்லவென்றும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஐ.நா அறிக்கையைத் தாமதப்படுத்துவதற்கு, ஐ.நா மற்றும் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கே , மங்கள சமரவீர தனது அமெரிக்கப் பயணத்தை, பயன்படுத்தியுள்ளார் என்றும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: