பிரணாப் முகர்ஜி, சுஷ்மா ஆகியோரையும் இன்று சந்திக்கவுள்ளார் மைத்திரி!

president_india_001உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட குழுவினர் நேற்று இந்தியா சென்றடைந்தனர்.

இதற்கமைய டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றடைந்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சிறிசேன மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இந்நாட்டு பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசு சார்பில் வரவேற்றார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி சிறிசேன, இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லவுள்ளார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை 11.05 மணிக்கு ஹோட்டல் ஐடிசி மெளரியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கவுள்ளதாகவும், அதையடுத்து, நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது.

அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் ஜனாதிபதி சிறிசேன, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கவுள்ளார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.

-http://www.tamilwin.com

TAGS: