இலங்கையில் உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்: பிரித்தானியா

huge_swire_001இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கு போரின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொணர்வது முக்கிய விடயமாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செப்டம்பருக்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கை தொடர்பான அறிக்கையை செப்டம்பர் வரைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒத்திவைத்தமை மூலம் குற்றவாளிகள் தப்பிக்க இடமுண்டு என்று சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகள் சட்டவிரோத கைதுகள் காணாமல் போதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகளின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களுக்கு தற்போது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபையின் ஆசிய பசுபிக் வலயப்பணிப்பாளர் ரிச்சட் பேனாட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இந்த தாமதிப்பு புதிய இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து உரிய தகவல்களை பெற்று உண்மைக் குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் கொண்டு வந்தால் மாத்திரம் நியாயப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பேனாட் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: