பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு முட்டுக்கட்டையா? – பிரித்தானிய தமிழர் பேரவை கொந்தளிப்பு

p40-001இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி,

இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த இறுதிக்கட்ட போரின் கடைசி வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாமதமாக ஒப்புக்கொண்டிருக்கிறது ஐ.நா அமைப்பு.

பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை இராணுவம் பொழிந்த குண்டு மழையில் அப்பாவி பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். 1,47,000 தமிழர்களின் நிலை என்னவென்பதே இன்று வரை தெரியாமல் இருக்கிறது.

ஆனால், எங்களுடைய அச்சமெல்லாம் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேன அரசு, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுமோ என்பதுதான். ‘போர்க் குற்றங்களை உள்நாட்டிலேயே ஒரு குழு அமைத்து விசாரிக்கிறோம்’ என்கிறது சிறீசேன அரசு.

தேர்தலுக்கு முன்னரே சிறீசேன, பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தையும் அதற்குத் தலைமை தாங்கிய ராஜபக்‌சவின் சகோதரர்களையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார். மேலும், போரின் இறுதி காலகட்டத்தில் வெள்ளைக் கொடி ஏந்தி, சரணடைய வந்த 1,000-க்கும் மேற்பட்டவர்களைக் கூண்டோடு சுட்டுத்தள்ள உத்தரவு போட்டவர் சிறீசேன.

இலங்கையின் பிரதான இனப்பிரச்சினையானது ஆழமாக வேரூன்​றிவிட்டது. 1948-களில் நடைபெற்ற நியாயமற்ற காலனியாதிக்க சூழ்ச்சி​யினால் தமிழர்களின் ஆட்சிப்பரப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சிங்களவர்கள் கைகளுக்குச் சென்றது. மேலும், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியமர்த்தப்படும் இராணுவத்தினால் பல்வேறு தமிழர்களுக்கு எதிரான சதித்திட்டங்களை மறைமுகமாக அரங்கேற்றத் துடிக்கிறது சிங்கள அரசு.

மற்ற நாடுகளில் அகதிகளாகக் குடிபெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்பக் கூடாது. மீதமிருக்கும் சொச்ச தமிழர்களையும் அடித்து விரட்டிவிட்டு தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பைக் கைப்பற்றி, தமிழரை சிறுபான்மையினமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.

இனி இலங்கையில் வாழும் தமிழர்களை சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலமாக மட்டுமே பாதுகாத்திட முடியும். மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனில், சிறீசேன அரசு ஏன் பயப்பட வேண்டும்? ஒருவேளை சர்வதேச அமைப்புகள் இந்த விவகாரத்தில் மெளனம் சாதித்து, சிறீசேன அரசின் மழுப்பல்களுக்கு செவி சாய்த்து விசாரணையை தாமதப்படுத்தினால், உலகில் உள்ள 10 கோடி தமிழர்கள் சர்வதேச நீதிமுறை மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

இலங்கை அரசு அரங்கேற்றிய மனித உரிமை மீறல் இன அழிப்புக் குற்றங்களை ஐ.நா மனித உரிமைக் கழகம் நியமித்த விசாரணைக் குழு விசாரணையை, பிரித்தானிய அரசு பொறுப்பேற்று அந்த அறிக்கையை மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி கொலைகாரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். சிறீசேன அரசை, பிரித்தானியா வலியுறுத்தி இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும்.

இலங்கையில் அரச கட்டமைப்புகளை முழுமை​யாக மாற்றியமைக்காமல் இனப்படுகொலை கொள்கையை அந்த அரசால் ஒருபோதும் நிறுத்த முடியாது. தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிட அனுமதிக்க வேண்டும். அதற்கு சர்வதேச சமூகங்களை ஒன்று திரட்டி, தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்” என்று தன் பேச்சால் அனைவரையும் நெஞ்சுருக வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் எதிர்க் கட்சித் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ.நா நடத்தும் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதைப் பதிவு செய்தனர். இது இலங்கை அதிபர் சிறீசேனவுக்குப் புதிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.

பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு தருமா சிறீசேன அரசு?

-http://www.tamilwin.com

TAGS: