சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்ஹூசேன் அளித்த பரிந்துரைக்கு மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையினை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில்,
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் உட்பட இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் பற்றி முழுமையான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை 25/1 தீர்மானம் கோரியிருந்தமையினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்ததோடு, வரும் மார்ச் ஐ.நா மனித உரிமைச்சபை அமர்வில் விசாரணை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நா மனித உரிமைச்சபை, இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு குறித்த விசரணையில் நம்பத்தகுந்தவாறான எவ்வகை முன்னேற்றமும் இல்லாமையைக் கண்டு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சிறிலங்காவில் புதிய அதிபராக பொறுப்பேறுள்ள மைத்திரிபால சிறிசேனா அவர்கள், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புப் போரின்போது, அப்போதைய ராஜபக்ச அரசின் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தாரென்பதும், அப்போது சிறிலங்காவின் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள், தற்போது, சிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்புத்துறை ஆலோசகராக உள்ளார் என்பதனையும் ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே, இவ்விருவருமே சிறிலங்காவில் நடந்தேறிய இனஅழிப்பை மூடிமறைக்கவே முற்படுவர் என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இடித்துரைத்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த பொறிமுறையில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தோல்விகளை கண்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைச்சபை தீர்மானம் 25/1 முன்மொழிவில் குறித்துரைக்கப்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலங்காவின் தேசிய செயற்பொறிமுறைகள் தொடர்ந்து உண்மையை நிறுவ மற்றும் நீதி நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதனையும் அத்தீர்மானத்தின் முன்மொழிவில் விவாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் நினைவூட்டியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில், சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையின் வாய்மூல அறிக்கையினை முன்வைக்க கோருவதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இது தொடர்பிலான வெளிப்படையான முழுமையான விவாதத்துக்கும் மனித உரிமைச்சபையினைக் கோரியுள்ளார்.
அறிக்கைதான் தாமதம்! ஆனால் அச்சுறுத்தல் ஓயவில்லை!
இலங்கைக்கு எதிரான ஜெனீவா விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு ஐ. நா. மனித உரிமைப் பேரவை தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க மனித உரிமை பேரவை தீர்மானித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், விசாரணை அறிக் கையை பிற்போட நடவடிக்கை எடுத்தது குறித்து அரசாங்கத்திற்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். எந்த அரசாங்கம் எது செய்தாலும் நல்ல விடயங்களை வரவேற்க வேண்டும்.
விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதால் எமது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.
வட மாகாண சபையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துமாறு பல டயஸ்போரா அமைப்புகள் மனித உரிமை பேரவையை கோரியுள்ளன. எனவே எமக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்கிறது என மேலும் அவர் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com