உள்ளக விசாரணையே இடம்பெறும்! ஐ.நா., அமெரிக்கா, இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம் என்கிறது அரசு

mullivaikkalஇறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த விடயத்தில் உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளதுடன் இதற்கு அமெரிக்காவும் ஐ.நாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிநாட்டவர்கள் அவசியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேசத் தராதரத்திற்கு அமைவாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் முன்பாகவுள்ள கடப்பாடெனக் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதகாலத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை ஐ.நா. மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இந்த வாக்குறுதிகளில் அடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தவகையில் ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு வர அரசு உடன்பட்டுள்ளதா என அமைச்சரவைப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, “ஆரம்பத்திலிருந்தே நாம் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு நாம் உறுதியளித்திருந்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனையே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

எமது விடயத்தில் வெளி விசாரணையை நாம் ஏற்கப்போவதில்லை. இதே நிலைப்பாட்டையே இந்தியாவும் எடுத்துள்ளது. இந்தியாவும் எம்முடன் இருக்கும் என்பது எமக்குத் தெரியும். நாம் இதே நிலைப்பாட்டையே தற்போது பேணுகின்றோம். எமது வெளிவிவகார அமைச்சர் தெட்டத்தெளிவாக இதனை அமெரிக்காவிடமும் ஐ.நாவிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.

இறுதியில் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இது இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அவர்கள் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையால் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு (உள்நாட்டு) விசாரணை அறிக்கையை செய்யமுடியுமா என்பதைப் பார்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (சர்வதேச விசாரணை) அறிக்கை சமர்பிக்கப்படுவதை ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

அந்தவகையில் சர்வதேச தராதரத்திற்கு அமைவாக அதனைச் செய்யவேண்டியது எமது கடமையாகும். தென் ஆபிரிக்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற உதாரணங்கள் எமக்கு முன்பாகவுள்ளன. அதே விடயத்தையே நாமும் பின்பற்றமுடியும். இதனையே நேற்றையதினம் (புதன்கிழமை) நாம் அமைச்சரவையில் கலந்துரையாடினோம்” – என்றார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: