அனைத்துலகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால் தான் உள்ளக விசாரணை – மங்கள சமரவீர

mangala-samaraweeraஅனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிலங்கா டி சில்வா விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்து நேற்று உரையாற்றிய போதே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு சிறிலங்கதா வந்திருந்த ஐ. நா. பொதுச்செயலருக்கு அனைத்துலக தரத்துக்கு அமைய உள்ளக விசாரணை நடத்தப்படும் என முன்னாள் அதிபர் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

ஆனால் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது.

எனினும் அனைத்துலக விசாரணையொன்றுக்கான அவசியம் இல்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கை.

நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றே அவசியம் என்பதை நாம் அன்றும் கூறியிருந்தோம்.  இப்போதும் எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என நாம் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருக்கவில்லை.

விசாரணைக்கான உள்ளகப் பொறிமுறையொன்று உருதுவாக்கப்படும் என்றே கூறியிருந்தோம்.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரோம் பிரகடனத்தில் நாம் கைச்சாத்திட வில்லையென்பதால் போர்க்குற்றம் தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. உள்ளக பொறிமுறையொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பின்புலத்தை நாம் தயார்செய்து வருகின்றோம்.

இதன் ஒரு அங்கமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு அனைத்துலகத்தாலும், தேசிய ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய சுயாதீன விசாரணைகளை அனைத்துலக உதவிகளுடன் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை மட்டுமன்றி அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் ஒத்துழைப்புகளையும் பெற்று தேசிய சுயாதீன உள்ளக விசாரணையை ஏற்படுத்துவோம்.

அனைத்துலகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது.

எனவே அனைத்துலகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம்.

எந்தவொரு நாட்டிலும் படையினர் நூறு வீதம் தவறு செய்யாதவர்களாக இருக்க மாட்டார்கள்.

எமது தேசிய சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.

அதுமட்டுமன்றி கடந்த அரசாங்கம் படையினரின் நற்பெயரை இல்லாமல் செய்திருந்தது. படையினர் விவசாயம் செய்வதற்கும், வீதிகளைக் கூட்டுவதற்கும், விடுதிகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டனர்.

இதனால் அவர்களின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. படையினர் இழந்த கெளரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் தேசிய சுயாதீன உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பில் வடக்கு மாகாணசபையும் வடபகுதி மக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நாம் கூறிய விடயங்களையே நிறைவேற்றுவோம்.

எந்தவொரு தரப்பினருக்கும் இனவாதத்தை தூண்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்” என்று அவர் தெரிவித்தார்.

-http://www.pathivu.com

TAGS: