தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்! – நீதி அமைச்சர் தெரிவிப்பு

sri lanka human rightபயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 182 தமிழ்க் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றில் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ­, இவர்களது குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழுவின் தீர்மானத்திற்கமைய குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகள் இன்னும் 3 வாரங்களுக்குள் விடுவிக்கப்படுவர் என்றும் உறுதியளித்தார்.

நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய முருகேசு சந்திரகுமார் எம்.பியின் கேள்விக்குப் பதிலளித்தபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முருகேசு சந்திரகுமார் எம்.பி. தனது உரையில், “தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக விடுதலை செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்ககளை விடுவிக்குமாறு நான் கடந்த காலங்களில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். இந்நிலையில், தற்போதைய அரசு, தமிழ் அரசியல் கைதிகளை எப்போது விடுவிக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ­,

“பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 182 தமிழ்க் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைதிகள் தொடர்பாக மேற்படி குழு ஆராய்ந்து மேற்கொள்ளும் தீர்மானத்துக்கமைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதவர்கள் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் விடுதலை செய்யப்படுவர்” – என்றார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: